அகமதாபாத் விமான விபத்து: சென்னைக்கு திரும்பிய விமானம்! ரத்து செய்யப்பட்ட விமானங்கள்! பயணிகள் அதிர்ச்சி!
"அகமதாபாத் விமான நிலையத்தில், விமான விபத்து எதிரொலி சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது"

chennai - ahamedabad flights cancel: சென்னையில் இருந்து 182 பயணிகளுடன், இன்று மதியம் அகமதாபாத் புறப்பட்டுச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால், அகமதாபாத்தில் தரையிறங்க முடியாமல், சென்னை- அகமதாபாத் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அகமதாபாத்தில் தரை இறங்க முடியாமல், அவசரமாக சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
சென்னை அகமதாபாத் விமானம்
சென்னையில் இருந்து இன்று பகல் 1:30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு, 182 பயணிகளுடன் புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. இந்த விமானம் இன்று மாலை 3:45 மணிக்கு, அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டும். ஆனால் இதற்கு இடையே அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற, ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று, திடீரென அகமதாபாத் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
மீண்டும் சென்னைக்கு வந்த விமானம்
அதனால் அகமதாபாத் விமான நிலையம், குறிப்பாக ஓடுபாதை முழுவதுமாக மூடப்பட்டு விட்டதாகவும், தகவல் கிடைத்தது. இதை அடுத்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தை நெருங்கிக் கொண்டிருந்த, சென்னை- அகமதாபாத் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறை மூலமாக, விமானிக்கு அவசரமாக தகவல் தெரிவிக்கப்பட்டு, இந்த விமானம் அகமதாபாத்திற்கு செல்லாமல் மீண்டும் நடு வானிலிருந்து திரும்பி, சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
ரத்து செய்யப்பட்ட விமானங்கள்
அகமதாபாத் விமான நிலையத்தில், லண்டன் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, அகமதாபாத் விமான நிலையம், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், இன்று மதியத்திற்கு மேல், சென்னை- அகமதாபாத்- சென்னை இடையே இயக்கப்படும்,4 பயணிகள் விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை- அகமதாபாத்- சென்னை இடையே, இயக்கப்படும் விமானங்கள் இன்று மதியத்தில் இருந்து ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை 5.45 மணிக்கு, சென்னையில் இருந்து புறப்பட்டு, இரவு 8.05 மணிக்கு அகமதாபாத் போய் சேர வேண்டிய, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதைப்போல் அகமதாபாத்தில் இருந்து மாலை 4.25 மணிக்கு, புறப்பட்டு மாலை 6.55 மணிக்கு, சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இரவு 7.45 மணிக்கு, அகமதாபாத்தில் புறப்பட்டு இரவு 10.10 மணிக்கு, சென்னைக்கு வரவேண்டிய, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஆகிய விமானங்களும், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. அகமதாபாத் விமான விபத்து காரணமாக, சென்னை- அகமதாபாத்- சென்னை இடையே, இயக்கப்படும் 4 விமானங்கள் இன்று ரத்து ஆகி உள்ளன.





















