கர்நாடகாவை தொடர்ந்து மத்திய பிரதேசத்தை குறி வைக்கும் காங்கிரஸ்..150 தொகுதிகளை தட்டி தூக்க சூப்பர் திட்டம்... வியூகம் அமைத்த ராகுல் காந்தி..!
கர்நாடகாவில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தை குறி வைத்துள்ளது காங்கிரஸ்.
பாஜக ஆளும் முக்கியமான மாநிலங்களில் ஒன்று மத்தியப் பிரதேசம். கடந்த 2003ஆம் ஆண்டு முதல் நடுவில் ஓராண்டை தவிர கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் பாஜக தொடர்ந்து ஆட்சி செய்து வரும் மாநிலம். பாஜக ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
பாஜகவின் கோட்டையாக உள்ள மத்திய பிரதேசம்:
ஆனால், முதலமைச்சர் பதவியை பெறுவதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத், இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கிடையே தொடர் போட்டி நிலவி வந்தது. கமல் நாத்துக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டதால் சிந்தியா அதிருப்தியில் இருந்து வந்தார்.
இறுதியில், சொந்த கட்சிக்கு எதிராக போர்க்கோடி தூக்கிய சிந்தியா, தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார். இதனால், ஆட்சி அமைத்த ஒரே ஆண்டில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்று, ஆட்சி நடத்தி வருகிறார்.
இச்சூழலில், மத்திய பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் இந்தாண்டு இறுதியுடன் முடிவடைகிறது. எனவே, ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மாநில தேர்தலுடன் மத்தியப் பிரதேசத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறி வைக்கும் காங்கிரஸ்:
கர்நாடகாவில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தை குறி வைத்துள்ளது காங்கிரஸ். ஐந்தாண்டு பதவி காலத்திற்கு நடுவே ஆட்சி கவிழ்ந்தாலும் கர்நாடகாவை போன்று மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது காங்கிரஸ்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் மத்திய பிரதேச தேர்தல் குறித்து பேசிய ராகுல் காந்தி, "இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் நம்பிக்கையுடன் உள்ளது. நாங்கள் நீண்ட நேரம் விவாதித்தோம். கர்நாடகாவில் 136 இடங்களில் வெற்றி பெறுவோம் என உட்கட்சியில் கணித்தோம். தற்போது, மத்தியப் பிரதேசத்தில் 150 இடங்களைப் பெறப் போகிறோம் என்பது எங்கள் கணிப்பு" என்றார்.
வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் தயார் நிலை குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் உள்பட மத்திய பிரதேசத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து ஆலோசித்தனர்.
சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல் நாத், "மத்திய பிரதேசத்தில் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளன. மத்தியப் பிரதேசத்தின் எதிர்காலம் மற்றும் மாநிலத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது" என்றார்.