Modi Vs EPS: காத்துக் கிடந்த இபிஎஸ், கண்டுகொள்ளாத மோடி; அப்செட்டில் அதிமுக.!! அப்போ கூட்டணி அம்பேலா.?
தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, கூட்டணி கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தனியாக சந்தித்து பேசாததால், கடும் அப்செட்டில் இருக்கிறது அதிமுக. அப்படியானால், கூட்டணியின் நிலை.?

தமிழ்நாடு வந்த மோடி தன்னை தனியாக சந்தித்து பேசுவார் என்று எதிர்பர்த்து காத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு ஏமாற்றமே மிஞ்சயதால் கடும் அப்செட்டில் இருப்பதாக சொல்கின்றனர். கூட்டணிக் கட்சி தலைவர் என்ற முறையில் கூட பாஜக அவரை டீல் செய்யவில்லை என்று கூறப்படும் நிலையில் இதற்கு பின்னணியில் இருக்கும் தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
கூட்டணி கட்சியினரை சந்திக்காத மோடி
பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்தார். இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில், கூட்டணி கட்சியினரை சந்திக்காமலேயே அவர் சென்றுவிட்டார்.
முன்னதாக, தங்கள் கூட்டணி வலுவாக இருப்பதாக திமுக கூறிவரும் நிலையில், மறுபுறம் அதிமுக - பாஜக கூட்டணி இன்னும் கூட்டணி என்ற நிலையையே அடையவில்லை என்று எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. அதற்கு ஏற்றார்போல், கூட்டணி ஆட்சி தொடர்பாக இரு கட்சிகளும் வேறு வேறு நிலைப்பாட்டில் பேசி வரும் நிலையில், அதிமுக, பாஜக இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் தான், மோடியின் தமிழக வருகை அதிமுக - பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு. கூட்டணிக் கட்சிகளை தனித்தனியாக சந்தித்து மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மோடி தனியாக சந்த்து பேசுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
அதற்கு தயாராக இருந்த பழனிசாமியும், பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் கூட்டணி தொடர்பாக சில விசயங்களை எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக, அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டாராம்.
ஆனால், திருச்சி விமான நிலையம் வந்தபோது, மோடியை, எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி ஆகியோர் வரவேற்றதோடு சரி. அதற்கு பிறகு எந்த சந்திப்பும் நடைபெறவில்லை. கூட்டணியில் இருக்கும் பிரச்னை, புதிதாக இணைய இருக்கும் கட்சிகள் என, எல்லாவற்றையும் பற்றி பேசலாம் என்று நினைத்தால், மோடி இப்படி கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டாரே என்று எடப்பாடி பழனிசாமி கடும் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இரு கட்சிகளையும் ஆட்டிப்படைக்கும் ‘கூட்டணி ஆட்சி‘ பிரச்னை
பிரதமர் மோடி இப்படி அதிமுகவினரை கழற்றி விட்டதற்கு காரணம், எடப்பாடி பழனிசாமி கட ந்த சில நாட்களாக கூட்டணி ஆட்சி எல்லாம் இல்லை, ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என்று கூறிவருவதுதான் என்று சொல்லப்படுகிறது. அவர் பேசியதையெல்லாம் டெல்லி தலைமை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
அதேபோல், தவெக-வையும் இபிஎஸ் இதுவரை விமர்சனம் செய்யவில்லை. இப்படி இருக்கும் பட்சத்தில், கடந்த முறை நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில், கூட்டணி முறிவை அறிவித்தவர் தானே இபிஎஸ், அதேபோல் சட்டமன்றத் தேர்தலின் போதும் தவெக-உடன் கூட்டணி அமைத்துவிட்டு, பாஜகவை கழற்றி விட்டுவிடுவாரோ என்று பாஜக கணக்குப் போடுவதாக தெரிகிறது. அதற்கு ஏற்றார்போல், தவெக உடன் கூட்டணி அமைக்க இபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று, இங்குள்ள பாஜகவினர் மூலம் டெல்லி பாஜகவிற்கு ரிப்போர்ட் போய் உள்ளதாக சொல்லப்படுகிறது.
அந்த கோபத்தின் காரணமாகத் தான், எடப்பாடி பழனிசாமியை போகிற போக்கில் டீல் செய்வோம் என்ற நினைப்பில் பாஜக இருப்பதாக சொல்கின்றனர். இதனால் தான், இபிஎஸ்-ஐ மோடி தனியாக சந்தித்து பேசவில்லை என்று சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். அப்போ, கூட்டணி அம்பேல் தானா.?




















