Wrestlers election: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலுக்கு தடை...குவஹாத்தி உயர் நீதிமன்றம் உத்தரவு..!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலுக்கு குவஹாத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

வரும் ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற உள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலுக்கு குவஹாத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தடைக்கு காரணம் என்ன?
அசாம் மல்யுத்த சங்கம் தொடர்ந்த வழக்கில் குவஹாத்தி உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு, விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு எதிராக அசாம் மல்யுத்த சங்கம் மனு ஒன்றை தாக்கல் செய்ததது. அதில், "இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உறுப்பு அமைப்பாக இருப்பததற்கு தகுதி இருந்த போதிலும், அதற்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை.
கடந்த 2014ஆம் ஆண்டு, நவம்பர் 15ஆம் தேதி, கோண்டாவில் நடந்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில், அசாம் மல்யுத்த சங்கத்தை உறுப்பு அமைப்பாக அறிவிக்க அப்போதைய நிர்வாக குழு பரிந்துரை வழங்கியது. ஆனால், அது நிராகரிக்கப்பட்டது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலுக்கான எலக்டோரல் காலேஜ்க்கு (உறுப்பினர்கள்) வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு ஜூன் 25ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. அதற்கான தேர்தல் வரும் ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெறவிருந்தது. அசாம் மல்யுத்த சங்கத்தை இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உறுப்பு அமைப்பாக அறிவிக்காத வரை, தங்களால் எலக்டோரல் காலேஜ்க்கு உறுப்பினர்களை பரிந்துரைக்க முடியாது. எனவே அதுவரை, தேர்தலை நடத்த கூடாது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும் வரை இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தலை நடத்த கூடாது என உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, வழக்கின் விசாரணையை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களின் கோரிக்கை:
பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தற்போதை தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தினர்.
மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் மத்திய அரசு மல்யுத்த வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, 5 முக்கிய கோரிக்கைகளை மல்யுத்த வீரர்கள் முன்வைத்தனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு சுதந்திரமான நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும், சம்மேளனத்திற்கு பெண் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என மல்யுத்த வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, தேர்தல் சுதந்திரமாக நடத்தப்படும் என வாக்குறுதி அளித்தது. அதன்படி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் தேர்தல் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது. இது, மல்யுத்த வீரர்களுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

