மருத்துவ கனவை பறித்த நீட்; ஆனா என்ன? 20 வயதில் ரோல்ஸ் ராய்ஸில் வேலை- ரூ. 72 லட்சம் ஊதியம்!
நீட் தேர்வால் மருத்துவ கனவு கலைந்தாலும், மனம் தளராமல் வேறு துறையில் சாதித்துக்காட்டி உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் இந்திய மாணவி ரிதுபர்னா.

கர்நாடகாவில் நீட் தேர்வு முறையால் மருத்துவ கனவை தவறவிட்ட 20 வயது மாணவி ரோபோட்டிக் இஞ்சினியரிங் துறையில் சாதித்து உலகளவில் கவனம் பெற்றுள்ளார். கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும்போதே, ஆடம்பரத்திற்கு பெயர்போன பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸில் வருடாந்திர சம்பளம் 72 லட்சம் ரூபாய்க்கு ஆஃபர் லெட்டர் பெற்றுள்ளார் மாணவி ரிதுபர்னா.
அடுத்த இலக்கை நோக்கி..
சிறு வயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்ற ஒற்றைக் கனவோடு உற்சாகமாய் படித்து வந்த கர்நாடக மாணவி ரிதுபர்னா. கொடூரு பகுதியை சேர்ந்த 20 வயது மாணவி ரிதுபர்னாவுக்கு, நீட்டில் கட் ஆஃப் குறைந்ததால் அரசுக் கல்லூரியில் சீட் மறுக்கப்பட்டது. இதனையடுத்து தனது கனவு சிதைந்த வருத்தத்தையே உத்வேகமாக மாற்றினார். UPSC தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கினார்.
அதே நேரத்தில் கேட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று சாயத்ரி பொறியியல் கல்லூரியில் ஆட்டோமேஷன் மற்றும் ரோபோட்டிக்ஸ் துறையை தேர்ந்தெடுத்து படித்துள்ளார் மாணவி ரிதுபர்னா..
கல்லூரி முதல் நாள் முதலே ரோபோட்டிக்ஸ் துறை பற்றி அறிய ஆர்வம் காட்டினார். விவசாயிகளுக்கு பெரும்பாடாக இருக்கும் பாக்கு அறுவடையை எளிமையாக்கும் வகையில் ரோபோட்டிக் அறுவடை இயந்திரம் ஒன்றை தனது குழுவுடன் சேர்ந்து உருவாக்கினார் ரிதுபர்னா. அதுதான் அவரது முதல் டீம் ப்ராஜெக்ட்.
பின்னர் National Institute of Technology-ன் ஆராய்த்தி துறையில் இணைந்து ரோபோட் மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் உடனிருந்தார். அதோடு திடக்கழிவு மேலாண்மைக்கான ஒரு செயலியின் உருவாக்கத்திற்கும் பங்களித்தார்.
வாழ்வையே புரட்டிப்போட்ட இடம்
அடுத்ததாக அவர் சென்ற இடம்தான் இன்று அவர் வாழ்வையே புரட்டிப்போட்டிருக்கிறது. உலகளாவிய வளர்ச்சியை எதிர்பார்த்து பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸில் இண்டர்ன்ஷிப்புக்காக நாடியுள்ளார். ஆனால் ரோல்ஸ் ராய்ஸோ, ரிதுவின் திறமையை குறைத்து எடைபோட்டுள்ளது. மேலும் நாங்கள் கொடுக்கும் சின்ன வேலையை ஒரு மாதத்திற்குள்கூட உங்களால் செய்து முடிக்க முடியாது என சவால் விட்டது ரோல்ஸ் ராய்ஸ். அதைக்கேட்ட மாணவி ரிது, நீங்கள் ஏன் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்க கூடாது என தைரியமாக கேட்டுள்ளார்.
மாணவியின் ஆர்வத்தை பார்த்து ரோல்ச் ராய்ஸ் நிறுவனமோ ஒரு மாத டெட்லைனில் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளது. அதை சரியாக ஒரே வாரத்திற்குள் முடித்து அசத்தியுள்ளார் இந்திய மாணவி ரிதுபர்னா. அதன்பின் காலேஜில் படித்துக்கொண்டே பகுதிநேரமாக நள்ளிரவு முதல் அதிகாலை 6 மணி அந்நிறுவனத்திற்காக பணிபுரிய தொடங்கினார்.
அசால்ட் காட்டிய ரிது
கடந்த டிசம்பர் 2024ல் அவர் அங்கு இணைந்தபோது அவரது வருடாந்திர ஊதியம் 39.6 லட்சம்.அதன்பின் 8 மாத காலம் ரோல்ஸ் ராய்ஸில் பல கடினமான டாஸ்க்களை அசால்ட்டாக முடித்துக்காட்டியதன் பலனாக தற்போது ரோல்ஸ் ராய்ஸ் ரிதுபர்னாவின் ஊதியத்தை அதிகரித்துள்ளது.
வருடத்திற்கு 72.3 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்க முடிவெடுத்துள்ளது ரோல்ஸ் ராய்ஸ். தற்போது 6வது செமஸ்டர் பயின்று வரும் ரிது, 7வது செமஸ்டர் முடித்தவுடன் உடனடியாக அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் முழுநேர ஊழியராக பணிபுரியலாம் என்ற ஆஃபர் லெட்டரையும் அளித்து மாணவிக்கு சர்ப்ரை கொடுத்துள்ளது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்.
20 வயதில் சாதித்துக் காட்டி உலகின் கவனத்தை ஈர்த்த மாணவி ரிதுபர்னாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.






















