மேலும் அறிய
பயத்தில் பாஜக கூட்டணி! திமுக தலைவர் ஸ்டாலின் எதற்கும் பயப்படமாட்டார் - பொன்முடி பரபரப்பு பேச்சு
எடப்பாடி.பழனிசாமி முதலில் பாஜகவுடன் சேர மாட்டேன் என கூறினார். தற்போது கூட்டணி வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தான் சொந்த பயத்தில் கூட்டணி வைத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பொன்முடி
Source : ABP NADU
விழுப்புரம்: எடப்பாடி பழனிசாமிதான் பயத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாகவும் தங்களுக்கு அப்படி பயப்பட வேண்டிய அவசியமில்லை திமுக தலைவர் ஸ்டாலின் எதற்கும் பயப்படுவதில்லை என முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் சாலாமேட்டில் இயங்கி வரும் அண்ணாமலை பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மையத்தில் இந்தாண்டிற்கான சேர்க்கை துவங்கப்படாததை கண்டித்து மாணவர்கள் கருப்பு துணி கட்டி கொண்டு பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பும் வெளியாகாமல் இருந்ததால் அதிமுக சிவி சண்முகம் தலைமையில் விழுப்புரத்தில் நாளை போராட்டம் அறிவிக்கபட்டது.
இந்நிலையில் முதுகலை சேர்க்கை தொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி
2010-2011ஆண்டுகளில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இருந்து விழுப்புரத்தில் முதுகலை மையம் தொடங்கப்பட்டது. அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியிலும் தொடங்கப்பட்டது. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டபோது அண்ணாமலை பல்கலைக்கழகம் அதனை தொடர்ந்து முதுநிலை கல்வி மையத்தை நடத்தி வந்தது.
2010-11-ல் நான்கு பட்டம் மேற்படிப்புகள் தொடங்கப்பட்டது. தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு இடமாற்றமும் செய்யப்பட்டது. இந்த ஆண்டிற்கான விண்ணப்பம் பெறப்படவில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்களிடம் எடுத்து கூறி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான உத்தரவுகள் பறிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் ஏழு பாடப்பிரிவுகளுக்கும் தொடர்ந்து விண்ணப்பம் பெறப்பட்டு சேர்க்கை நடைபெறும். பட்ட மேற்படிப்புக்கான மையம் தொடர்ந்து செயல்படும். விழுப்புரம் அரசு கல்லூரிகளையும் பட்டம் மேற்படிப்பு மையம் உள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக பட்டம் மேற்படிப்பு மையமும் உள்ளது.
பட்ட மேற்படிப்பு மையம் தொடர்ந்து நடைபெறுவது தெரிந்தே அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு இது குறித்து நான் பேசியுள்ளேன். கல்வித்துறையை பொறுத்த வரையில் இந்த ஆண்டு 9 கல்லூரிகள் திறக்கப்படுள்ளன. நான்கு ஆண்டுகளில் மட்டும் 50க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளது. உயர்கல்விகள் வளர்ச்சி என்பது இந்தியாவிலேயே தமிழகம் தான் முதன்மையாக உள்ளது. நாளை அதிமுக போராட்டம் இருக்காது என கருதுகிறேன்.
உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் திமுகவின் தோல்வி பயத்தை காட்டுகிறது என அன்புமணி கூறியது குறித்த கேள்விக்கு, அன்புமணி முதலில் அப்பா, மகன் பிரச்சினையை தீர்த்து விட்டு வந்து, பிறகு எங்களிடம் பேசட்டும். அரசுத்துறை அலுவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் நேரடியாக தொடர்பு கொண்டு பல்வேறு பணிகளை நிறைவேற்றும் விதமாக தமிழக முதல்வர் இதுபோன்ற திட்டங்களை அறிவித்துள்ளார். இதனை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் திமுக பயத்தில் உள்ளது என எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்த கேள்விக்கு:
எடப்பாடி.பழனிசாமி முதலில் பாஜகவுடன் சேர மாட்டேன் என கூறினார். தற்போது கூட்டணி வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தான் சொந்த பயத்தில் கூட்டணி வைத்துள்ளார். எங்களுக்கு அப்படி பயப்பட வேண்டிய அவசியமில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் எதற்கும் பயப்படுவதில்லை.
மகளிர் உரிமைத்தொகை திமுகவிலிருந்து கொடுக்கிறார்கள் என எடப்பாடி.பழனிச்சாமி கேட்கிறார். அதிமுக ஆட்சியில், அதிமுகவிலிருந்தா கொடுத்தார்கள். அரசு திட்டங்களை அரசு நிதியில் இருந்து தான் செய்வார்கள். அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் என்ன அதிமுகவாக நிதி கொடுத்தது. அரசு நிதியிலிருந்து தான் கொடுப்பார்கள். எதிர்க்கட்சி தலைவர் இருந்து கொண்டு இப்படி பேசுவது சரியானது அல்ல.
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரி கொண்டுவரப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கல்வி வளர்ச்சியை பொருத்தவரை கலைஞர் ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி ஏற்பட்டுள்ளன. இது அதிமுகவுக்கும் தெரியும். அதிமுகவும் ஒன்றும் செய்யவில்லை என நாங்கள் கூறவில்லை. சிவி.சண்முகம் சட்டத்துறை அமைச்சராக இருந்தபோது சட்டக் கல்லூரி கொண்டுவரப்பட்டது. அதிமுகவும் செய்துள்ளது.
உயர்கல்வி பொறுத்தவரை பெயர் வைப்பதற்காக ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதில்லை சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் பல்வேறு பணிகளை செய்து வருகிறோம். ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை கொண்டு வர இடம் இல்லை, அதிமுக பெயர் வைத்தார்களே தவிர நிதி ஒதுக்கப்படவில்லை. அதனால் அண்ணாமலை பல்கலைக்கோடு இணைத்து அதன் செயல்படுத்தி வருகிறோம்.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்த கேள்விக்கு: முதலில் அதிமுக ஆட்சிக்கு வரட்டும் பிறகு பார்ப்போம். நிரந்தர முதல்வராக எப்போதும் ஸ்டாலின் தான் இருப்பார். இவ்வாறு அவர் பேசினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















