ஆளுநர் மாளிகையில் பரபர.. திமுக முன்னாள் நிர்வாகிக்கு எதிராக புகார் அளிக்க சென்ற பாதிக்கப்பட்ட மாணவி
திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள தெய்வச்செயலுக்கு எதிராக புகார் அளிக்க, பாதிக்கப்பட்ட மாணவி ஆளுநர் மாளிகை சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகி (தற்போது நீக்கப்பட்டுள்ளார்) மீது அரக்கோணத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஆளுநர் மாளிகை வரை சென்ற பாதிக்கப்பட்ட மாணவி, அவர் மீது புகார் அளிக்க முயற்சித்துள்ளார்.
ஆளுநர் மாளிகைக்கு சென்ற மாணவி:
திமுக இளைஞரணி துணை அமைப்பாளரான தெய்வச்செயல், இளம் பெண்களை கட்டாயப்படுத்தி அரசியல்வாதிகளுக்கு இரையாக்கி வருவதாக மாணவி சமீபத்தில் பரபரப்பு புகார் அளித்திருந்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி செய்தியாளர்களிடம் சமீபத்தில் பேசுகையில், '20 வயது பெண்களை காதலிப்பதாகக் கூறி, கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து கொள்வதே தெய்வச்செயலின் குறிக்கோள்.
ஐந்து வருடத்திற்கு ஒவ்வொரு 20 வயது பெண்ணை தேடி காதலித்து டார்ச்சர் செய்துள்ளார். திமுக கட்சியில் இருக்கிறேன். நீ என்னை கல்யாணம் செய்துகொள் இல்லையென்றால் உங்கள் அப்பா அம்மாவை கொலை பண்ணி விடுவேன் என்று மிரட்டினார். வேற யாருமே கிடையாது என தெரிந்துகொண்டு தினமும் டார்ச்சர் செய்து கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து கொண்டார்.
திமுக முன்னாள் நிர்வாகிக்கு எதிராக பாலியல் புகார்கள்:
இந்த விஷயம் வெளியே போச்சுன்னா உன்னையும் உன் குடும்பத்தையும் துண்டுத் துண்டாக வெட்டிடுவேன் என மிரட்டினார். எல்லா ஆடியோவும் என்னிடம் இருக்கிறது'' என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
மாணவியின் புகாரைத் தொடர்ந்து திமுகவிலிருந்து தெய்வச்செயல் நீக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவி ஏற்கனவே ராணிப்பேட்டை காவல் நிலையத்திலும் டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளித்தார். இந்த சூழலில், தனது புகார் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் காவல்துறையினர் தன்னை மிரட்டுவதாகவும் மாணவி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், தெய்வச்செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளார் பாதிக்கப்பட்ட மாணவி. ஆனால், முன் அனுமதி பெறாத காரணத்தால் ஆளுநரை சந்திக்க அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியிடம் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பில் இருந்த காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கிருந்து அழைத்து சென்றுள்ளனர்.





















