IPL LSG Vs GT: மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் அதிரடி; 235 ரன்களை குவித்த லக்னோ - டார்கெட்டை எட்டுமா குஜராத்
IPL 2025 LSG Vs GT: குஜராத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் முதலில் ஆடிய லக்னோ 235 ரன்களை குவித்துள்ளது.

குஜராத்தில் இன்று நடைபெற்றுவரும் ஐபிஎல் லீக் போட்டியில், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியும், 7-வது இடத்தில் இருக்கும் லக்னோ அணியும் விளையாடி வருகின்றன. இதில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 235 ரன்களை குவித்துள்ளது.
மிட்செல் மார்ஷின் அபார சதத்துடன் 235 ரன்களை குவித்த லக்னோ
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்.
இருவரும் அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டிற்கு 91 ரன்களை சேர்த்த நிலையில், 24 பந்துகளில் 2 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கேட்ச் கொடுத்து மார்க்ரம் ஆட்டமிழந்தார். எனினும், மறுமுனையில் மார்ஷ் தொடர்ந்து குஜராத்தின் பந்துவீச்சை சிதறடித்துக் கொண்டிருந்தார்.
அவருடன் ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரனும் பந்துகளை பறக்க விட்டார். இதனிடையே, மிட்செல் மார்ஷ் ஐபிஎல்லில் தனது முதல் சதத்தை அடித்தார். மறுமுனையில் அதிரடி காட்டிவந்த நிக்கோலஸ் பூரன் 23 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
இந்நிலையில், அபாரமாக ஆடிவந்த மார்ஷ் 64 பந்துகளில் 8 சிக்சர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்களை குவித்துள்ளது. பூரன் 56 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 6 பந்துகளில் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன் மூலம், குஜராத் அணிக்கு 236 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டார்கெட்டை எட்டுமா குஜராத்.? பொறுத்திருந்து பார்ப்போம்.




















