வேலை தேடும் வாலிபர்கள் கவனத்திற்கு... வரும் 18ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்ங்க - எங்கு தெரியுமாங்க?
இந்த வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

தஞ்சாவூர்: வேலை தேடும் இளைஞர்களுக்காக சிறுஅளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 18ம் தேதி தஞ்சாவூரில் நடக்கிறது என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி வருகின்ற 18.07.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தவர்கள், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.
மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்தல் அவசியம். தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெற்று பயன் அடையுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறுங்கள். இவ்வாறு தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
சிறு குறு விவசாயிகள் கவனத்திற்கு...
தஞ்சை மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் 50 சதவீத மானியத்தில் தீவனபுல் நறுக்கும் கருவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் 2025-26ம் ஆண்டில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் மின்சாரத்தால் இயக்கும் தீவனப்புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட உள்ளது. பசுந்தீவனம் கால்நடைகளுக்கு தேவையான ஊட்டச்சத் துக்களை வழங்கி அதன் மூலம் பால் மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு திறனை உருவாக்கவும், இனப்பெருக்க திறனை மேம்படுத்துவதற்கும் ஆதாரமாக உள்ளது.
கால்நடை வளர்ப்போரிடையே பசுந்தீவன உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கத்துடனும் தீவன விரயத்தை குறைக்கும் நோக்கத்துடனும், கால்நடைகளின் செரிமானத்தை அதிகப்படுத்தி உற்பத்தியை பெருக்கவும் தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் மின்சாரத்தால் இயங்கும் தீவனப்புல் நறுக்கும் கருவிகள் பெற பாசன வசதியுள்ள 0.25 ஏக்கர் விவசாய நிலத்தில் தீவனப்புல் பயிரிட்டு, குறைந்தது 2 கால்நடைகள் வைத்திருத்தல் அவசியம். தீவனப்புல் நறுக்கும் கருவிகள் தஞ்சை மாவட்டத்திற்கு 24 எண்ணிக்கையில் வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டங்களில் சிறு, குறு மற்றும் பழங்குடியினர், ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆர்வமுள்ள விவசாயிகள் இத்திட்டங்கள் தொடர்பான விரிவான தகவல்களை பெறவும். விண்ணப்பிக்கவும் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி டாக்டரை தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





















