தலைமை ஆசிரியை அராஜகம்?ஆசிரியர்களுக்கு மன உளைச்சல்! போராட்டத்தில் குதித்த மாணவிகள்
அரசு உதவி பெறும் பெண்டிங் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையின் நடவடிக்கைகளை கண்டித்து பள்ளிமாணவிகள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சென்னை வேப்பேரியில் அரசு உதவி பெறும் பென்டிங் மகளிர் மேல்நிலைபள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள தலைமை ஆசிரியை பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக இதே பெயரில் இயங்கி வரும் சுய நிதி பள்ளிக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் அரசு உதவி பெறும் பள்ளியில் குடிநீர், கழிவறை, சத்துணவு வகுப்பறை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் சரி இல்லை எனவும் இப்பள்ளியில் பயிலும் மாணவிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
மேலும் உட்கட்டமைப்பு வசதி குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தால் புகார் அளிக்கும் ஆசிரியையும் மாணவிகளையும் உடனே பள்ளியை விட்டு நீக்குவதாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எவ்வித காரணமும் இல்லாமல் இப்பள்ளியில் உள்ள பழைய ஆசிரியைகளை திடீரென பள்ளியை விட்டு நீக்கம் செய்வதால் தங்களது கல்வியின் நிலை கேள்விக்குறியாய் உள்ளதாக மாணவிகள் தெரிவித்தனர்.
2000 பேருக்கு மேல் படித்து வந்த அரசு உதவி பெரும் பெண்டிங் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தற்போது வெறும் 500 பேர் மட்டுமே இருப்பதாகவும் ஆட்குறைப்பு செய்யும் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தலைமை ஆசிரியரின் இந்த நடவடிக்கைகளால் இங்கு பயிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதாக தெரிவுத்துள்ளனர். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை விவகாரத்தில் தலையிட்டு அரசு உதவி பெறும் பெண்டிங் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும் என முன்னாள் மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.





















