IPL LSG Win: ஷாருக்கான், ருதர்ஃபோர்ட்டின் அதிரடி வீண் - கோட்டை விட்ட குஜராத் - 33 ரன்களில் லக்னோ வெற்றி
குஜராத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில், குஜராத் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது.

குஜராத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியும், 7-வது இடத்தில் இருக்கும் லக்னோ அணியும் மோதின. இதில், 33 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை லக்னோ அணி வீழ்த்தியது.
மிட்செல் மார்ஷின் அபார சதம், பூரனின் அதிரடியில் 235 ரன்களை குவித்த லக்னோ
இருவரும் அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டிற்கு 91 ரன்களை சேர்த்த நிலையில், 24 பந்துகளில் 2 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கேட்ச் கொடுத்து மார்க்ரம் ஆட்டமிழந்தார். எனினும், மறுமுனையில் மார்ஷ் தொடர்ந்து குஜராத்தின் பந்துவீச்சை சிதறடித்துக் கொண்டிருந்தார்.
அவருடன் ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரனும் பந்துகளை பறக்க விட்டார். இதனிடையே, மிட்செல் மார்ஷ் ஐபிஎல்லில் தனது முதல் சதத்தை அடித்தார். மறுமுனையில் அதிரடி காட்டிவந்த நிக்கோலஸ் பூரன் 23 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
இந்நிலையில், அபாரமாக ஆடிவந்த மார்ஷ் 64 பந்துகளில் 8 சிக்சர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்களை குவித்துள்ளது. பூரன் 56 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 6 பந்துகளில் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அதிரடி காட்டிய மொத்த டீம் - ஆனால் இறுதியில் விட்ட கோட்டை
இதைத் தொடர்ந்து, 236 ரன்கள் வெற்றி இலக்குடன் குஜராத் களமிறங்கிய நிலையில், இவர் தான் என்று இல்லாமல், மொத்த அணியுமே அதிரடி காட்டியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாய் சுதர்ஷன் மற்றும் கேப்டன் சுப்மன் இருவருமே சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்.
சாய் சுதர்ஷன் 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஜாஸ் பட்லர் களமிறங்கினார். கில்லுடன் ஜோடி சேர்ந்த அவரும் சிறப்பாக ஆடிய நிலையில், 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்த கில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ருதர்ஃபோர்ட் களமிறங்கினார்.
இந்நிலையில், லக்னோவின் பந்துவீச்சை சிதறடித்துக் கொண்டிருந்த ஜாஸ் பட்லர், 18 பந்துகளில் 2 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து ருதர்ஃபோர்டுடன் ஜோடி சேர்ந்த ஷாருக்கான் அதிரடி காட்டினார்.
இந்நிலையில், மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த ருதர்ஃபோர்ட், 22 பந்துகளில் 3 சிக்சர்கள் ஒரு பவுண்டரியுடன் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்தபடியாக களமிறங்கிய தேவாட்டியா மற்றும் அர்ஷத் கான் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஒரு முனையில் ஷாருக்கான் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும், 19-வது ஓவரில் முக்கியமான தருணத்தில், 29 பந்துகளில் 3 சிக்சர்கள் 5 பவுண்டரிகளுடன் 57 ரன்களை எடுத்திருந்த ஷாருக்கான் ஆட்டமிழந்தார்.
பின்னர், கடைசி ஓவரில் 38 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், ரபாடாவும் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதையடுத்து, 20 ஓவர்களின் முடிவில், குஜராத் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்களை மட்மே சேர்த்து தோல்வியை தழுவியது.
இதன் மூலம், லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ தரப்பில், அதிகபட்சமாக வில் ஓ‘ரூர்கே 3 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான், ஆயுஷ் பதோனி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.




















