Rajasthan Election: ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் தேதியில் மாற்றம்.. இதான் காரணமா?
குறிப்பிட்ட அந்த தேதியில் திருமணங்களை நடத்தவும் சுப நிகழ்வுகளை நடத்தவும் பொது மக்கள் திட்டமிட்டிருப்பதால் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தன.
ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் தற்போது மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 23ஆம் தேதி நடத்தப்படவிருந்த வாக்குப்பதிவு, 25ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் அரசியல் சூழல்:
ராஜஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சி, தேர்தலில் வென்றதாக சரித்திரமே இல்லை. பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், 200 தொகுதிகளில் 100 இடங்களில் வென்ற காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.
தற்போது, ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ், இந்த முறை ஆட்சியை தக்க வைக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் அசோக் கெலாட், பல்வேறு மக்கள் நல திட்டங்களை அறிவித்து வருகிறார். அதேபோல, ஆட்சியை கைப்பற்ற பாஜக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களவை உறுப்பினர்கள் பலரை சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளராக களமிறக்கியுள்ளது. எனவே, போட்டி இந்த முறை கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் தேதியில் மாற்றம்:
இச்சூழலில், ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நேற்று முன்தினம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ராஜஸ்தானில் வரும் நவம்பர் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருந்தது. ஆனால், சுப முகூர்த்தம் என்பதால் குறிப்பிட்ட அந்த தேதியில் திருமணங்களை நடத்தவும் சுப நிகழ்வுகளை நடத்தவும் பொது மக்கள் திட்டமிட்டிருப்பதால் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தன.
இந்த கோரிக்கைகளை ஏற்ற இந்திய தேர்தல் ஆணையம், தற்போது தேர்தல் தேதியை மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 23ஆம் தேதி நடத்தப்படவிருந்த வாக்குப்பதிவு, 25ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் வரும் அக்டோபர் 30ஆம் தேதி தொடங்கும் நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 6ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 7ஆம் தேதி, வேட்புமனு சரிபார்க்கப்படும் என்றும் வேட்பு மனுவை திரும்பபெறுவதற்கான கடைசி நாள் நவம்பர் 9ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுடன் சேர்த்து, வரும் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதையும் படிக்க: Five State Elections: மக்களவை தேர்தலுக்கான செமி பைனல்.. ஐந்து மாநில தேர்தல் தேதியை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்