Tesla Vs Indian Rivals: டெஸ்லா தாக்குப்பிடிக்குமா? முறுக்கிட்டு நிக்கும் இந்தியாவின் மஹிந்திரா, டாடா EV-க்கள் - எது பெஸ்ட்?
Tesla Vs Mahindra Tata EV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மின்சார பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களை, டெஸ்லா நிறுவனம் எப்படி எதிர்கொள்ளும் என்பதை அலசி ஆராயலாம்.

Tesla Vs Mahindra Tata EV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வெகுஜன மின்சார கார்கள் பிரிவில் டாடா மற்றும் மஹிந்திரா கார் மாடல்கள் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் டெஸ்லா கார் அறிமுகம்:
நீண்ட இழுபறிக்கு பிறகு இந்தியாவில், உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்கின் டெஸ்லா கார் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் நிறுவனத்தின் முதல் ஷோ ரூம் திறக்கப்பட்டுள்ளது. ரூ.22 ஆயிரம் என்ற தொகையுடன் மாடல் Y காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அதற்கான விநியோகம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் தொடங்கப்பட உள்ளது. இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் விலையானது, 59 லட்சத்து 89 ஆயிரத்தில் தொடங்கி 67 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாடல் Y காருக்கான போட்டியாளர்கள் யார்?
விலை அடிப்படையில் உள்நாட்டு சந்தையில் இந்த காரானது, BYD சீலியன் 7, BMW iX1, ஹுண்டாய் ஐயோனிக் 5 மற்றும் கியா EV6 ஆகிய கார் மாடல்களுடன் போட்டியிட உள்ளது. அதேநேரம், அம்சங்கள் அடிப்படையில் உள்நாட்டு உற்பத்தியாளர்களால் விற்பனை செய்யப்படும் மேலும் சில கார்களும் மாடல் Y-க்கு போட்டியாளர்களாக திகழ்கின்றன. அதில் மஹிந்திராவின் BE6, XEV 9e மற்றும் டாடாவின் ஹாரியர் மின்சார எடிஷன் ஆகியவை அடங்கும்.
டெஸ்லாவின் மாடல் Y காரின் அம்சங்கள்:
ரியர் வீல் ட்ரைவ் அம்சம் கொண்ட மாடல் Y காரின் வேரியண்ட்களானது 60KWh மற்றும் 75KWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரானது ஒற்றை மின்சார மோட்டாரை கொண்டு 295hp மற்றும் 420Nm அற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. சிறிய பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டரும், பெரிய பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்தால் 522 கிலோ மீட்டரும் மாடல் Y கார் ரேஞ்ச் அளிக்கும் என டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை 5.6 விநாடிகளில் எட்டும் திறன் கொண்ட இந்த கார், அதிகபட்சமாக மணிக்கு 201 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியதாகும்.
மஹிந்திராவின் XEV 9e
மஹிந்திராவின் XEV 9e ஆனது எஸ்யுவி கூபே கார் மாடலாகும். இதன் ஷோரூம் விலை 21 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயிலிருந்து தொடங்கி, 31 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை நீடிக்கிறது. ஏராளமான தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ள இந்த காரானது, அதிகபட்சமாக 79KWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இதனை முழுமயாக சார்ஜ் செய்தால் 689 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், நிஜ உலகில் சுமார் 500 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிப்பதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். கூடுதலாக 59KWh என்ற சிறிய பேட்டரி பேக் எடிஷனானது, 542 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என மஹிந்திரா நிறுவனம் உறுதியளித்துள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 202 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட இந்த கார், பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை வெறும் 6.8 விநாடிகளில் எட்டும் திறன் கொண்டுள்ளது.
மஹிந்திராவின் BE6:
மஹிந்திராவின் BE6 கார் மாடலானது 59KWh மற்றும் 79KWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. ரியர் வீல் ட்ரைவ் செட்-அப்பை கொண்ட இந்த காரானது,சிறிய பேட்டரி பேக்கில் 557 கிலோ மீட்டர் ரேஞ்சையும், பெரிய பேட்டரி பேக்கில் 638 கிலோ மீட்டர் ரேஞ்சையும் அளிக்கும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரின் ஷோரூம் விலை 18 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 29 லட்சத்து 42 அயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
XEV 9e மற்றும் BE6 ஆகிய இரண்டு கார் மாடல்களுமே, மல்டிபிள் ட்ரைவிங் மோட்ஸ், ரிஜெனரேடிவ் பிரேக்கிங், விர்ட்சுவல் இன்ஜின் சவுண்ட்ஸ் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய அம்சங்களை நிலையாக கொண்டுள்ளன. இரண்டு மின்சார எஸ்யுவிக்களிலும் பாதுகாப்பிற்காக 6 ஏர் பேக்குகள், நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், லெவல் 2 ADAS, ஃப்ரண்ட் & ரியர் பார்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளன.
டாடா ஹாரியர் மின்சார எடிஷன்
டாடா ஹாரியர் மின்சார எடிஷனின் விலை 21 லட்சத்து 49 ஆயிரத்தில் தொடங்கி, 30 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் வரை நீள்கிறது. 65KWh மற்றும் 75KWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டு, அதிகபட்சமாக 627 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிப்பதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த காரானது, பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை 6.3 விநாடிகளில் எட்டும்.
இந்த காரில் வயர்லெஸ் சார்ஜர், ஏர் பியூரிஃபயர், பவர்ட் டெயில்கேட், க்ரூஸ் கண்ட்ரோல், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், கூல்ட் ஸ்டோரேஜ் உடன் கூடிய ஸ்லைடிங் ஆர்ம்ரெஸ்ட், அடானமஸ் பார்கிங் அசிஸ்டன்ஸ், சம்மன் மோட், ரிவெர்ஸ் அசிஸ்டன்ஸ், பேடல் ஷிஃப்டர்ஸ் உடன் கூடிய பலதரப்பட்ட ரிஜெனரேஷன் மோட்ஸ், 540 டிகிரி சுற்றுப்புற கண்காணிப்பு , எச்டி ரியர்வியூ மிரர் IRVM மற்றும் டிஜிட்டல் கீ ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்திய கார்களின் நன்மைகள்:
இன்ஜின் செயல்திறன் மற்றும் ரேஞ்ச் ஆகியவற்றை ஒப்பிடுகையில், BE6, XEV 9e மற்றும் ஹாரியர் ஆகிய மின்சார கார்கள் மாடல் Y-க்கு கிட்டத்தட்ட இணையானதாகவே உள்ளன. விலை அடிப்படையில் ஒப்பிடுகையில், டெஸ்லா காரை காட்டிலும் பாதி விலைக்கே மஹிந்திரா மற்றும் டாடாவின் கார்கள் கிடைக்கின்றன. அதிகபட்ச கிரவுண்ட் கிளியரன்ஸ், விசாலமான இடவசதி, ஆல் வீல் ட்ரைவ் அல்லது மூன்று ஸ்க்ரீன்கள் என உள்ளூர் சந்தைக்கு ஏற்ற அம்சங்களை கொண்டுள்ளன. வலுவான கட்டமைப்பு காரணமாக, மஹிந்திரா மற்றும் டாடா நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான சார்ஜிங் மையங்களை கொண்டுள்ளன.
டெஸ்லாவின் மாடல் Y நன்மைகள்:
சர்வதேச அளவில் புகழ்பெற்றதாய் விளங்கும் பிராண்ட்டின் மாடல் Y காரில் கிடைக்கும், ஆட்டோபைலட் மற்றும் ஓவர் தி ஏர் அப்டேட்கள் போன்ற அம்சங்கள் இந்திய போட்டியாளர்களால் வழங்கப்படுவதில்லை. அதிவேகமான ஆக்சிலரேட்டிங் மற்றும் எளிமையான கையாளுதல் ஸ்போர்ட்ஸ் வாகன அனுபவத்தை வழங்குகிறது. வலுவான கட்டமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களால் சர்வதேச பாதுகாப்பு தரத்தை உறுதி செய்கின்றன.
மாடல் Y Vs இந்திய போட்டியாளர்கள் - எது பெஸ்ட்?
பிராண்டடின் மதிப்பு, மேம்பட்ட ஓட்டுநர் உதவி மற்றும் மெருகூட்டப்பட்ட மின்சார வாகன அனுபவத்தை முன்னுரிமைப்படுத்தும் பயனர்களுக்கு டெஸ்லா மாடல் Y சிறந்த தேர்வாக இருக்கும். இது நகர்ப்புற, வசதி படைத்த பயனர்களுக்கு ஏற்றதாக அமைகிறது. அதேநேரம், மஹிந்திரா XEV 9e, BE 6 மற்றும் டாடா ஹாரியர் EV ஆகியவை விலைக்கு நிகரான மதிப்பு, நீண்ட வரம்புகள் மற்றும் இந்திய சாலைகளுக்கு ஏற்ற அம்சங்களை வழங்குகின்றன. நடைமுறைக்கு மிகவும் உகந்ததாக உள்ளன. பட்ஜெட், வரம்பு மற்றும் உள்ளூர் சாலைகளுக்கு ஏற்றது ஆகியவற்றை கருத்தில் கொண்டால், இந்திய EVகள் குறிப்பாக ஆடம்பரத்திற்கான XEV 9e அல்லது பல்துறைத்திறனுக்கான ஹாரியர் EV சரியான தேர்வாக இருக்கும்.





















