மயிலாடுதுறையில் முதல்வரின் ரோடு ஷோ நிகழ்வில் டிஎஸ்பிக்கு உதை...! என்ன நடந்தது...?
தமிழக முதலமைச்சர் நடை பயண ரோடு ஷோ நிகழ்ச்சியில் கூட்டத்திலிருந்து உள்ளே வந்த அரசு வழக்கறிஞர் அருள்தாஸ் என்பவரை போலீசார் தடுத்த நிலையில் வழக்கறிஞர் டி.எஸ்.பி-யை எட்டி உதைக்க முயன்றதால் பரபரப்பு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மற்றும் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இருநாள் சுற்றுப்பயணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளார். அவரது வருகையால் மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
முதல்வருக்கு வரவேற்பு மற்றும் கலைஞர் சிலை திறப்பு
மயிலாடுதுறை மாவட்ட நுழைவு எல்லையான கொள்ளிடத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்ட உயர் அரசு அதிகாரிகள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, சோதியகுடி, செம்பதனிருப்பு மற்றும் மயிலாடுதுறையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவ வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞர் மீதான மக்களின் அன்பையும் மரியாதையையும் பறைசாற்றும் வகையில் இந்நிகழ்வில் திரளானோர் திரண்டிருந்தனர்.

உணர்ச்சி பொங்க ஏற்றப்பட்ட திமுக கொடி
மேலும் சிலை திறப்பு விழாவைத் தொடர்ந்து அங்கே அமைக்கப்பட்டுள்ள 60 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். அப்போது, கொடிக்கம்பத்தில் பொருத்தப்பட்ட தானியங்கி மோட்டார் இயங்காததால், அங்கிருந்த திமுக தொண்டர்கள் இரும்பு கொடி கம்பியை வெறும் கையால் உணர்ச்சிபொங்க இழுத்து ஏற்றி வைத்தனர். இது திமுக தொண்டர்களின் கட்சிப் பற்றையும், முதலமைச்சர் மீதான அவர்களது பற்றுதலையும் வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. இந்த நிகழ்வு கூட்டத்தினர் மத்தியில் பெரும் கரவொலியைப் பெற்றது.

நேற்று மதியம் முதல்வர் அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின் பூர்விக இல்லத்திற்கு சென்று உணவு உண்டு ஓய்வெடுத்தார். தொடர்ந்து நேற்றிரவு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கினர்.
மயிலாடுதுறையில் ரோடு ஷோ
இந்நிலையில்
மயிலாடுதுறையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ நிகழ்ச்சி மூலம் பொது மக்களை சந்தித்து கச்சேரி சாலையில் உள்ள கட்சி அலுவலகமான புதுப்பிக்கப்பட்ட அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் கலைஞர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார். நான்கு கிலோமீட்டர் தூரம் இரண்டு பக்கமும் பேரிகார்டு தடுப்புகள் போடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இரண்டு பக்கமும் நின்று முதலமைச்சர் மு.க ஸ்டாலினை வரவேற்றனர்.

முதலமைச்சர் நடைபயணமாக கச்சேரி சாலை கட்சி அலுவலகம் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அங்கு திமுக அரசு வழக்கறிஞர் அருள்தாஸ் என்பவர் பொதுமக்கள் கூட்டத்தில் இருந்து திடீரென்று முதல்வர் நடைந்து வரும் சாலை உள்ளே புகுந்துள்ளார். இதைப் பார்த்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக இழுத்துச் சென்றனர்.

தடுத்த காவலர் உதைத்த வழக்கறிஞர்
அப்போது கட்சி பொறுப்பாளர்கள் அவர் அரசு வழக்கறிஞர் என்று சொன்னதன் பெயரில் போலீசார் அருள்தாஸ்சை விடுவித்தனர். தன்னை இழுத்துச் சென்றதால் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் அருள்தாஸ்சை கட்சி பொறுப்பாளர்கள் சமாதானப்படுத்தினர். அப்போது அருள்தாஸ் திடீரென்று அங்கு பணியில் இருந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த டி.எஸ்.பி ஒருவரை எட்டி உதைக்க முயன்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து திமுக நிர்வாகிகள் ஒரு சிலர் அரசு வழக்கறிஞரை அடித்ததாக கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தப்பட்டனர். முதலமைச்சர் வரும் சமயத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நேற்று இருவேறு இடங்களில் கலைஞர் சிலை திறப்பு நிகழ்ச்சியில் சோதியகுடியில் மாவட்ட துணை செயலாளர் ஞானவேலனுக்கும், செம்பதனிருப்பு பகுதியில் திமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.






















