Donald Trump Inauguration: இன்று அதிபராகிறார் டொனால்ட் ட்ரம்ப்..! இந்தியாவிற்கான தாக்கம் என்ன? லாபமா? நஷ்டமா?
Donald Trump Inauguration: அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கிறார்.

Donald Trump Inauguration: டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம், இந்தியாவின் மீது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இங்கே அறியலாம்.
ட்ரம்ப் பதவியேற்பு விழா:
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடனை வீழ்த்தி முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அபார வெற்றி பெற்றார். அதனைதொடர்ந்து, அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்க உள்ளார். இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பராக கருதப்படும், டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலம் இந்தியாவின் மீது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
அமெரிக்காவின் முடிவு, இந்தியாவின் மீது தாக்கம்:
காரணம் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 18% பங்குடன், நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதி தளமாக அமெரிக்கா உள்ளது. இந்தியப் பொருளாதாரம் அமெரிக்கப் பொருளாதாரத்துடன் நெருக்கமாகப் பிணைந்திருப்பதால், அமெரிக்காவில் எந்தக் கொள்கை மாற்றமும் இந்தியப் பொருளாதாரத்தில் வெகுதூரம் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாகவே டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம் இந்திய சந்தைகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? டிரம்ப் 2.0 உடன் இந்தியாவின் உறவு எப்படி அமையும் என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.
பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகள்
அனைத்திலும் தங்கள் நாட்டிற்கே முதன்மை முக்கியத்துவம் என்ற 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' என்பதே ட்ரம்பின் முழக்கமாக உள்ளது. அதன்படி, அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனங்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் அதே வேளையில், இறக்குமதியின் மீதான நம்பிக்கையையும் குறைக்கவும் திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாக இந்தியாவிலிருந்து செய்யப்படும் இறக்குமதிகளை குறைக்க அழுத்தம் கொடுக்கலாம். இதற்காக இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படலாம். குறிப்பாக அமெரிக்க தயாரிப்புகளுடன் நேரடியாக போட்டியிடும். இந்திய ஏற்றுமதியாளர்கள், உதாரணமாக மருந்துகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஜவுளி போன்ற துறைகளில் அதிக சுங்க வரிகளை எதிர்கொள்ள நேரிடும்.
சீனா எதிர்ப்பால் பலனா?
அதேநேரம், ட்ரம்பின் சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு இந்தியாவில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை உயர்த்த வேண்டும் என்ற அவரது எண்ணம் இந்தியாவுக்கு மறைமுகமாக பலனளிக்கும். தங்கள் விநியோகச் சங்கிலிகளைப் பல்வகைப்படுத்தவும், குறைந்த செலவிலான இடங்களுக்கு நடவடிக்கைகளை மாற்றவும் விரும்பும் அமெரிக்க நிறுவனங்களுக்கு மாற்று சாத்தியமான இடமாக இந்தியா உருவாகலாம். இது இந்திய எலக்ட்ரானிக்ஸ், உலோகங்கள், ரசாயனங்கள், ஜவுளிகள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கான அமெரிக்க சந்தைகளைத் திறக்கும்.
புவிசார் அரசியல்
தனது முந்தைய ஆட்சிக் காலத்தில் இந்தியா உள்ளிட்ட முக்கிய சர்வதேச நட்பு நாடுகளுடன், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத்தில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை டிரம்ப் விரும்பினார். இரண்டாவது ஆட்சிக்காலத்த்லும் அதனை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கண்டத்தில் சீனாவின் ஆதிக்கம் வலுவடைவதை தடுக்க, இந்தியாவுடன் நட்புறவை பேணவே ட்ரம்ப் விரும்புகிறார். இந்த புவிசார் அரசியல் காரணமாக அமெரிக்க-இந்தியா உறவுகளை வலுப்படுத்துவது, மருந்துகள், பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் இந்திய வணிகங்களுக்கு பயனளிக்கும்.
வணிக சந்தை தாக்கம்
கார்ப்பரேட் வரி விகிதத்தை தற்போதைய 21% இலிருந்து 15% ஆக குறைக்க ட்ரம்ப் முன்மொழிந்த திட்டம் இந்தியா உட்பட உலக சந்தைகளில் சந்தைக்கு ஏற்ற சூழலை உருவாக்க முடியும். அவரது முந்தைய ஆட்சிக் காலத்தில் பார்த்தது போல், அவரது கட்டுப்பாடுகள் நீக்கம் முயற்சிகள், வரி குறைப்புகள் மற்றும் கார்ப்பரேட்-நட்பு கொள்கைகள் உலகம் முழுவதும் நம்பிக்கையை வளர்க்கும். இது உலகளாவிய பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளில் முதலீட்டாளர் ஆர்வத்தை அதிகரிக்கவும் வழிவகுக்கும். இதனால் இந்திய பங்குச்சந்தையில் அந்நிய நிறுவன முதலீட்டு பங்கேற்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். மொத்தத்தில், ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலம், வாய்ப்புகள் மற்றும் சவால்கள் ஆகிய இரண்டிலும் இந்தியாவிற்கு ஒரு கலவையான கண்ணோட்டத்தை அளிக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

