Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Udhayanidhi Slams EPS: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி 3 கார்கள் மாறி பயணித்ததாக, ணைமுதலமைச்சர் உதயநிதி விமர்சித்துள்ளார்.

Udhayanidhi Slams EPS: சட்டப்பேரவையில் தான் பேசும்போதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் இருப்பதில்லை என, துணைமுதலமைச்சர் உதயநிதி விமர்சித்துள்ளார்.
எடப்பாடியை விமர்சித்த உதயநிதி
சட்டப்பேரவையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி, “ அவசரப்பணியாக டெல்லி சென்று திரும்பிய எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணை தலைவர் ஆகியோர் நான் பதில் சொல்லும்போது ஒருமுறை கூட சட்டப்பேரவையில் இருப்பதில்லை. தொடர்ந்து கவனித்து கொண்டே இருக்கிறேன். ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது காரில் ஏற முயன்றபோது, பிரச்னையில்லை செல்லுங்கள் என்று கூறினேன். அப்போது எங்கள் கார் எங்கும் தவறாக செல்லாது என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் கூறினார். ஆனால் இன்று டெல்லியில் ரூட் மாறி, கிட்டத்தட்ட மூன்று கார்கள் மாறி அவர்களுடைய கட்சி அலுவலகத்திற்கு சென்றதாக சொன்னார்கள். அதற்கு வாழ்த்துகள்.
”மகளிர் உரிமைத்தொகை”
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ”ரூ” போட்டு தமிழ்நாடு பட்ஜெட் தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பலரை அலறச் செய்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை கோரி விரைவில் புதியவர்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த 19 மாதங்களில் ரூ.21 ஆயிரம் கோடி உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 1.15 கோடி பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும்அடையாள அட்டை வழங்கப்படும். நான் முதல்வன் திட்டத்தில் 2.56 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டால் 104 விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 4 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.4 கோடி உயர் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. வீரர்கள் திறமைக்கேற்ப உதவித்தொகை வழங்கப்படும்.
கார் பந்தயம்
சென்னை கார் பந்தயத்தை விமர்சித்தவர்களே அதை பாராட்டினார்கள். ஒட்டுமொத்த உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தெற்காசியாவில் முதன்முறையாக இரவில் கார் ரேஸ் நடத்தப்பட்டுள்ளது. எந்த சவலானா போட்டியையும் எளிதில் நடத்தும் ஆற்றல் நமக்கு உண்டு. தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளைக்கு ரூ.28 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளது. 120 வட்டாரங்களில் ரூ.1000 கோடியில் வாழ்ந்து காட்டுவோம் 3.0 திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.66 கோடியில் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். 5 மண்டலங்களில் மகளிர் சுய உதவிக்குழு சார்பில் உணவுத்திருவிழா நடத்தப்படும்.
மினி ஸ்டேடியம்
நிலம் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும். ராதாபுரத்தில் சர்வதேச தரத்தில் மைதானம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். 6 மாவட்டங்களில் பாரா விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் இன்னும் 3 மாதங்களில் நிறைவுபெறும். 22 சட்டப்பேரவை தொகுதிகளில் மினி ஸ்டேடியம் கட்டும் பணி விரைவில் தொடங்கும்.இதுவரை 6 புதிய விளையாட்டு விடுதிகள் தொடங்கப்பட்டு உள்ளது. விடுதி மாணவர்களின் எண்ணிக்கை 2300ல் இருந்து 2600 ஆக அதிகரித்துள்ளது. சென்னை மற்றும் மதுரையில் 24 நாடுகள் பங்கேற்கும் ஜுனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி நடப்பாண்டு ரூ.56 கோடி செலவில் நடைபெறும். ரூ.19 கோடியில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு மையம் அமைக்கப்படும். 25 ஆயிரம் விளையாட்டு வீரர்களுக்கு காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். ” என உதயநிதி பேசினார்.

