Trump Vs Iran: ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
புதிய அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக பேச வருமாறும், தவறினால் வேறு மாதிரி நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் கூறி, ஈரானை மிரட்டி ட்ரம்ப் அனுப்பிய கடிதத்திற்கு, அந்நாடு பதிலளித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதிய அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக பேச வருமாறும், அவ்வாறு வராவிட்டால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ஈரானை மிரட்டி ஏற்கனவே கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், ட்ரம்புக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்பது போல் பேசிய ஈரான், தற்போது பதில் கடிதம் அனுப்பியுள்ளது. இதனால், ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு ஈரான் பயந்ததாகவே கருதப்படுகிறது.
ஈரானுக்கு ட்ரம்ப் அனுப்பிய கடிதம் என்ன.?
கடந்த 2015-ல் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுடன், ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டியது. அதில், சர்வதேச தடைகளை நீக்குவதற்கு ஈடாக, அதன் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த ஈரான் ஒப்புக்கொண்டது.
இந்நிலையில், 2018-ல் அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில், ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார். பின்னர், தற்போது மீண்டும் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அணு ஆயுத உற்பத்தியை ஈரான் அதிகரித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, அவர்களுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுக்கும் விதமாக புதிய ஒப்பந்தத்தை கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, சமீபத்தில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனேனிக்கு ட்ரம்ப் கடிதம் எழுதியிருந்தார். அதில், புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கு விரைவில் ஒப்புக்கொள்ளாவிட்டால், வேறு விதமாக அதை முடிக்க வேண்டியிருக்கும் என்று ட்ரம்ப் எச்சரித்திருந்தார். அது மட்டுமல்லாமல், ஈரானுக்கு 2 மாதங்கள் கெடுவும் விதித்திருந்தார்.
ட்ரம்ப்புக்கு கட்டுப்பட ஈரான் மறுப்பு
ட்ரம்ப்பின் கடிதம் குறித்து கருத்து தெரிவித்த ஈரான் அதிபர் மசூத், அமெரிக்கா உத்தரவுகள் வழங்குவதையும், அச்சுறுத்தல்கள் விடுப்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்திருந்தார். நான் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன், நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்றும் கூறியிருந்தார்.
ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்? - கடிதத்திற்கு பதில் அனுப்பியது
ஈரான் அதிபர் கெத்தாக பேசியது மட்டுமில்லாமல், பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில், ஆயிரக்கணக்கான நவீனரக ஏவுகணைகளை ஈரான் ராணுவம் சேமித்து வைத்துள்ள வீடியோ ஒன்றும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தங்கள் நாட்டு ராணுவ பலத்தை காட்டும் விதமாக ஈரான் வெளியிட்ட அந்த வீடியோ, அமெரிக்காவிற்கான மறைமுக பதில் மிரட்டல் என்றே கருதப்பட்டது. ஆனால், இன்றோ, அதற்கு நேர்மாறாக, ட்ரம்ப்பின் கடிதத்திற்கு அதிகாரப்பூர்வமான பதில் கடிதத்தை ஈரான் அனுப்பியுள்ளது.
நேரடியாக அந்த கடிதத்தை அமெரிக்காவிற்கு அனுப்பாமல், வரலாற்று ரீதியாக இருநாடுகளிடையே மத்தியஸ்தம் செய்யும் ஓமன் மூலம், அந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக, ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில், தற்போதைய சூழலில் தங்களின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ட்ரம்ப்பின் கடிதம் மற்ற தரப்பினருக்கு முழுமையாக விளக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் குறித்த தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், ட்ரம்ப்பின் அதிகபட்ச அழுத்தம் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் குறித்த அச்சுறுத்தல்களுக்கு எதிராகவே தங்களின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளதாக, அதாவது, அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவாத்தை நடத்த முடியாது என்றும், கடந்த காலங்களில் நடைபெற்றது போல் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தலாம் என குறிப்பிட்டுள்ளதாகவு அராக்சி கூறியுள்ளார்.

