Fake News On NorthIndians : வடமாநில தொழிலாளர் பற்றி வதந்தி... பாஜகவின் பிரசாந்த் உம்ராவுக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு ..
வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய விவகாரத்தில் பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.
வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய விவகாரத்தில் பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே சில தினங்களுக்கு முன் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்களும், செய்திகளும் வைரலாக பரவியது. இதனால் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்வதாகவும் குறிப்பிடப்பட்டு அந்த தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவியது.
இத்தகைய வதந்தியை பரப்பியவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ரா மீதும் இதேபோல தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.அவரை கைது செய்ய தமிழ்நாடு போலீசார் டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கலுக்கு சென்ற நிலையில் பிரசாந்த் உம்ரா தலைமறைவாகி விட்டார். மேலும் அவர் முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு காவல்துறை சார்பில், தவறு செய்துவிட்டு பிரசாந்த் உம்ராவ் இதுவரை மன்னிப்பு கூட கேட்கவில்லை. நீதிமன்றத்தை நாடுவதற்கு முன்பு கூட வடமாநில தொழிலாளர்கள் குறித்த வதந்தியை பரப்பியதாக தெரிவித்தனர். மேலும் வதந்தி பரப்புவது இந்தியாவையே பிரிக்கும் செயல், தேசவிரோத செயல் என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து முன் ஜாமீன் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாட பிரசாந்த் உம்ராவை டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.