அமித் ஷா போலி வீடியோ விவகாரம்.. காங்கிரஸ் நிர்வாகிக்கு 3 நாள்கள் போலீஸ் கஸ்டடி!
அமித்ஷாவின் போலி வீடியோவை பரப்பிய விவகாரம் தொடர்பாக தெலங்கானா காங்கிரஸ் நிர்வாகி அருண் ரெட்டியை மூன்று நாள்களுக்கு டெல்லி காவல்துறை கஸ்டடியில் எடுத்துள்ளது.
உச்சக்கட்ட பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, தென் மாநிலங்களில் பாஜக தீவிரமாக வேலை செய்து வருகிறது.
அமித் ஷாவின் போலி வீடியோ விவகாரம்:
தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு ஏற்கனவே நிறைவு பெற்றுள்ள நிலையில், தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் ஒரே கட்டமாக வரும் மே மாதம் 13ஆம் தேதி மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுவது போன்ற எடிட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்ததாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி காவல்துறை சம்மன் அனுப்பியது. தெலங்கானா முதலமைச்சரை தவிர காங்கிரஸ் நிர்வாகி அருண் ரெட்டி உள்பட நான்கு பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த வீடியோவானது தெலங்கானா காங்கிரஸின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பகிரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, பல அரசியல் கட்சித் தலைவர்கள் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அமித் ஷா பேசுவது போல் அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் நிர்வாகியை தட்டி தூக்கிய டெல்லி போலீஸ்:
எடிட் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பாஜக மற்றும் உள்துறை அமைச்சகம் அளித்த புகாரின் பேரில், டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் போலி வீடியோவை பரப்பிய விவகாரம் தொடர்பாக தெலங்கானா காங்கிரஸ் நிர்வாகி அருண் ரெட்டியை மூன்று நாள்களுக்கு டெல்லி காவல்துறை கஸ்டடியில் எடுத்துள்ளது.
முதல் தகவல் அறிக்கையில் 120பி (குற்றச் சதி) பிரிவின் கீழ் புதிய குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. கடந்த வாரம், டெல்லி காவல்துறையால் ஏற்கனவே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போது, கூடுதலாக புதிய குற்ற பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறை மேற்கொண்ட முதல் கைது நடவடிக்கை அருண் ரெட்டி ஆவார். அவர் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு டெல்லியில் இருந்து கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட அருண் ரெட்டி, 'ஸ்பிரிட் ஆஃப் காங்கிரஸ்' என்ற சமூக ஊடக கணக்கை நடத்தி வருகிறார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) சமூக ஊடகங்களுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் தெலங்கானா மாநில சமூக ஊடகப் பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் அருண் ரெட்டி உள்ளார். அவரது கைப்பேசி கைப்பற்றப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது, அதிலிருந்து அவர் ஆதாரங்களை நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.