மேலும் அறிய
மதுரை கனிம வளக் கொள்ளை ; ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை... ஆட்சியருக்கு வந்த கடிதம் !
தனி கவனம் செலுத்தி மண் மற்றும் கல்குவாரியில் முறைப்படுத்தி சட்ட விரோதமாக கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்
மதுரை மாவட்டத்தில் கல்குவாரி, மணல் குவாரிகளில் போலி ரசீது, போலி பெர்மிட் மூலம் சட்ட விரோதமாக மண்வளம் சுரண்டல் நடைபெறுகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
ஆர்.பி.உதயகுமார் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது..," மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகள் உள்ளதை தாங்கள் நன்றாக அறிவீர்கள். அதில் புறநகர் பகுதியில் அமைந்துள்ள தொகுதியான திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான், திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மேலூர் உள்ளிட்ட 6 தொகுதிகளில் அமைந்துள்ள கல்குவாரிகள், மணல் குவாரிகளில் தொடர்ந்து அரசு அனுமதித்த அளவை விட அதிகமான அளவு கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
போலி ரசிது - போலி பெர்மிட்
குறிப்பாக திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதியில் மணல் குவாரிகளில் போலி ரசீது, போலி பிரமிட் சட்டவிரோதமாக மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கின்ற வகையில் மண்வளத்தை சுரண்டுதல் நடைபெற்று வருகிறது. இந்த சட்ட விரோத கல்குவாரிகள், மணல்குவாரிகளை தாங்கள் உரிய முறையில் ஆய்வு செய்து தொடர் கண்காணிப்பு நடத்தி கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்துவீர்கள் என, மதுரை மக்கள் தாங்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் நாங்களும் வைத்திருக்கிறோம். இல்லையென்றால் சிவகங்கை மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் உயிர் பலி ஏற்பட்டதே, அதேபோல உயிர்பலி மதுரையில் நடைபெறக் கூடாது. அதை தாங்கள் இரும்பு கரம் கொண்டு தடுத்து நிறுத்துவீர்கள் என மதுரை மாவட்ட மக்கள் தங்கள் மீது நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
நேற்று கூட திருமங்கலம்தொகுதி, திருமங்கலம் ஒன்றியம் புதுப்பட்டி, கள்ளிக்குடி ஒன்றியம் செங்கப்படை உள்ளிட்ட கிராமங்களில் போலி ரசீது வைத்துக்கொண்டு கனிவளக் கொள்ளை நடந்து வருவதை தடுத்து நிறுத்திட மக்கள் என்னிடத்தில் கோரிக்கை மனுவும் கொடுத்துள்ளார்கள். மேலும் கனிமவளம் தொடர் கொள்ளையாக நடந்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் இது குறித்து, சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரில், முதலமைச்சர் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் அவர்களிடமும் கோரிக்கை வைத்து சட்டப்பேரவையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே மாவட்ட ஆட்சியர் அவர்கள், சிறப்பு தனிக்கவனம் செலுத்தி மண் மட்டும் கல்குவாரிகளை முறைப்படுத்தி, சட்ட விரோதமாக கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்திட அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்" எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















