அடுத்தடுத்து உயிரிழப்பு: 13 வயதில் காய்கறி வியாபாரத்திற்கு வந்த சிறுவன்!
10 வது படிக்கும் தனது 16 வயது சகோதரியின் எதிர்காலத்திற்காகவும் , குடும்ப வறுமை காரணமாகவும் தினமும் விடியற்காலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை , காய்கறி மார்க்கெட்டில் அயராது உழைக்கும் 13 வயது சிறுவனின் உருக்கமான கதை .
"அப்பாவுக்கு பிறப்பில் இருந்தே இரண்டு காலும் ஊனம் , எங்க அப்பா வழி பாட்டி 'தாந்தோனி' தான் சின்ன வயசுல இருந்து காய்கறி வியாபாரம் செஞ்சு எங்க அப்பாவ பார்த்துக்கிட்டாங்க . அதுக்கு அப்புறம் தான் , எங்க அப்பா காய்கறி வியபாரத்த முழுசா கத்துக்கிட்டு , வேலூர் டிஐஜி ஆபீஸ் எதிரே உள்ள பலவன்சத்துக்குப்பம் உழவர் சந்தையில் கடை வச்சி வியாபாரம் செஞ்சிட்டு வந்தாரு , போன மாசம் கொரோனா அறிகுறி இருக்குனு இங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனோம் , டாக்டருங்க அவரை செக் பண்ணிபாத்துட்டு , இது கொரோனவா இருக்கும்னு சொன்ன ரெண்டே.... நாலுல இறந்துட்டாரு . அப்பா ,பாட்டி இரண்டுபேருமே இறந்தது தெரிஞ்சி தினமும் கடன் காரங்க 'உங்க அப்பா 50 ஆயிரம் தரணும் , ஒரு லட்சம் தரணும்னு' வீட்டு வாசல்ல நின்னுகிட்டு மிரட்டுறாங்க . அதனால தான், அண்ணா அப்பா பார்த்த காய்கறி வியபாரத்த நான் பார்த்துக்குறேன் " என தனது சோக கதையை கூற ஆரம்பித்தார் 13 வயதாகும் யஷ்வந்த் .
யார் இந்த யஸ்வந்த் ?
வேலூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பலவன்சத்துக்குப்பம் , ஒற்றை வாடி தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன் (47) ஊட்டச்சத்து குறைபாடுகளால் இரண்டு கால்களிலும் ஊனத்துடன் பிறந்த இவர் , தனது தாய் தான்தோனி மற்றும் நண்பர்கள் உதவியுடன் பலவன்சத்துக்குப்பதில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் காய்கறி கடை வைத்து நடத்தி வந்துள்ளார் . இவருக்கு திருமணம் நடைபெற்று இந்திரா (40) என்ற மனைவியும் , ஜனனி என்ற 16 வயது நிரம்பிய மகளும் , யஸ்வந்த் (13) என்ற மகனும் உள்ளனர் . ஜனனி , யஸ்வந்த் இருவரும் , அவர்கள் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பும் , பத்தாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர் .
இந்நிலையில் கடந்த மே மாதம் 11 ஆம் தேதி கொரோனா அறிகுறிகளுடன் , வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயசீலன் , அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் , அங்குள்ள மருத்துவர்கள் ஜெயசீலனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் சிகிச்சைக்கு ,பல லட்சங்கள் செலவாகும் என்று கூறியதால் , வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 11 ஆம் தேதியே அனுமதிக்கப்பட்டார் .
மூச்சுத்திணறல் , இருமல் , உடல்வலி என அனைத்து கொரோனா அறிகுறிகளும் இருந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் ஜெயசீலனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .
வெளிநோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஜெயசீலன் மே மாதம் 13 ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக அரசு மருத்துவமனையிலேயே உயிர் இழந்தார் . அவரது சடலத்தை அடக்கம் செய்வதற்கு கூட பணம் இல்லாமல் தவித்த ஜெயசீலனின் குடும்பத்தினர் , மாநகராட்சி நிர்வாகத்திடமே ஜெயசீலனின் உடலை மரியாதை செய்வதற்காக ஒப்படைத்தனர் .
'பட்ட காலிலே படும்! கெட்ட குடியே கெடும் ! ' என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல் , அவர்களது குடும்பத்தில் காய்கறி வியபாரத்தின் அனைத்து நுணுக்கங்களையும் நன்கு அறிந்து , ஜெயசீலன் மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்துக்கு ஆணிவேராய் இருந்த ஜெயசீலனின் தாய் தாந்தோனியும் , ஜெயசீலன் இறந்த அடுத்த 5 நாட்களில் உடல் நிலை பாதிப்பால் உயிர் இழந்தார் .
இவர்கள் இருவரது மரணத்துக்கு பிறகு , கடன் கொடுத்துதவர்கள் , கடனை திருப்பி தர கேட்டு , ஜெயசீலனின் மனைவி இந்தித்திராவின் கழுத்தை நெறிக்க தொடங்கியதால் . வேறு வழியின்றி 13 வயது யஸ்வந்த் குடும்ப பொறுப்பை அவரது கையில் எடுத்து கொண்டார் .
ABP நாடு செய்திக் குழுமம் அவரை சந்தித்து அவருடன் உரையாடிய பொழுது " எனக்கு நல்ல படிக்கணும் , எங்க அக்காவையும் நல்ல படிக்க வச்சு கல்யாணம் பண்ணி குடுக்கணும் , உடல் நிலை சரியில்லாத எங்க அம்மாவை கடைசி வரைக்கும் நல்லா பாத்துக்கணும் அதுக்கு தான் அண்ணா , நான் இவளோ கஷ்டப்படுறேன் " என தன்னம்பிக்கை கலந்த சோகத்துடன் கூறிய யஸ்வந்த் , காலை 3 மணிக்கு எழுந்து அவர்களது வீட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வேலூர் "மாங்கா மாண்டி" மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு அவரது அப்பா பயன்படுத்திய , மாற்றுத் திறனாளிகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஸ்கூட்டரில் , காய்கறி வாங்குவது தொடங்கி , அதை அவர்களது கடையில் விற்றது போக மீதும் இருக்கும் , காய்கறிகளை அவர்களுது வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு டெலிவெரி செய்து , அன்றைய தினத்தின் வியாபார கணக்குகளை பார்த்து முடிக்கும் வரைக்கும் தனி ஒரு சிறுவனாக இருந்து சமாளித்து வருகிறான் .
இந்த ஏழ்மை நிலையிலும் , தன்னம்பிக்கையோடு குடும்ப பாரத்தை சுமக்கும் ,13 வயது சிறுவன் யஷ்வந்தை அரசு அடையாளம் கண்டு , தமிழ் நாடு அரசு அறிவித்துள்ள 18 வயதிற்கு கீழுள்ள சிறுவர்கள் கொரோனா பாதிப்பு திட்டத்தின் கீழ் வரும் அனைத்து சலுகைகளையும் வழங்கி , அவர்களது குடும்ப கடன் சுமைகளையும் சரி செய்ய வேண்டும் என்று பலவன்சாத்துக்குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .