Hair Care : கூந்தல் பராமரிப்பு.. முடி உதிர்தல்.. என்ன செய்யவேண்டும்?
ஆரோக்கியமான, அடர்த்தியான கூந்தலைப்பெற என்ன செய்ய வேண்டும்?
கூந்தல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் என்பது நம் உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புள்ளது. பராமரிப்பும் ஆரோக்கியமான கூந்தலுக்கு அவசியமானதாக உள்ளது.
கூந்தல் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம். நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். இன்று பெரும்பாலானோர் சாட் வகைகளையும், பாஸ்ட் புட்களையும் தான் அதிக அளவில் விரும்பி உண்ணுகின்றனர். இன்னும் சிலரோ அசைவ வகைகளை ஒரு பிடி பிடிக்கின்றனர். கூந்தல் வளர்ச்சி மட்டும் அல்ல , முழு உடல் ஆரோக்கியத்துக்கும் ஊட்டச்சத்துகள் மிகவும் அவசியம்.
ஆரோக்கியமான அடர்த்தியான கூந்தலுக்கு காய்கறிகள், முளைகட்டிய பயறு மற்றும் தானிய வகைகளை உண்ண வேண்டும். பராமரிப்பு அதை விட அவசியம்.
தலைமுடியை கட்ட வேண்டும். குறிப்பாக பின்னல் போட வேண்டும். குறைந்தபட்சம் இரவில் உறங்க செல்லும் முன்பாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து தலையை பின்னிக்கொண்டு தூங்கலாம். ரசாயனம் கலந்த உயர் ரக பிராண்டெட் ஆயில்களை பயன்படுத்தினால் கூந்தல் நீளமாக வளர்ந்து விடும் என்று சிலர் நம்புகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. சுத்தமான செக்கில் அரைத்து எடுத்த தேங்காய் எண்ணெயை மட்டும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலே போதும் நல்ல அடர்த்தியான அழகான கூந்தலை பெற முடியும்.
தலைக்கு ஷாம்புகளை பயன்படுத்துவதற்கு பதில் சீயக்காய் உபயோகப்படுத்தலாம். சில ஷாம்புகளில் அதிக அளவிலான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால் அது கூந்தலை சேதம் அடைய செய்கிறது. கூந்தலில் வெடிப்பு ஏற்படுகிறது. இதனால் முடி வளர்ச்சி பாதிக்கப்படும். இயற்கையாக கிடைக்க கூடிய வெந்தயம், பாசி பயறு உள்ளிட்டவற்றை கொண்டு தலைக்கு பேக் போட்டு தலை குளிப்பதன் மூலம் தலையில் பொடுகு உள்ளிட்டவை ஏற்படுவதை தடுப்பதுடன் கூந்தல் பளபளப்பாக இருக்கும்.
இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு கூந்தலை நன்றாக வாரி பின்னிக்கொண்டு தூங்குவது நல்லது. தலைமுடியை விரித்தவாறு தூங்கும்போது தலையணை மற்றும் மெத்தைகளில் முடி உராய்ந்து சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.
நீளமான கூந்தலை சுத்தமாக பராமரிப்பது அவசியம். வாரத்திற்கு இரண்டு முறை ரசாயனங்கள் கலக்காத ஷாம்புவை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இதன்மூலம் முடி உதிர்தல் மற்றும் சேதம் அடைதலை தடுக்கலாம்.
நீளமான கூந்தல் உள்ளவர்கள் அதை சிக்கலின்றி வைத்திருப்பது முக்கியம். சிக்கெடுக்கும்போது முனைகளில் இருந்து தொடங்கி, படிப்படியாகவும், மெதுவாகவும் மேல்நோக்கிச் செல்லுங்கள். ஈரமான கூந்தலை சீப்பு கொண்டு வாரி சிக்கெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். தலைமுடி நன்றாக உலர்ந்த பின்னர், கைகளால் மெதுவாக நீவிவிட்டபடி சிக்கல்களை பிரிப்பது நல்லது.