Thug Life: கர்நாடகாவில் தக்ஃலைப் படத்திற்கு தடை.. கமல் மன்னிப்பு கேட்டால்தான் ரிலீஸ் பண்ணுவாங்களாம்!
கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வரை தக்ஃலைப் படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிப்பதாக அந்த மாநில திரைப்பட சங்கம் அறிவித்துள்ளது.

இந்திய திரையுலகின் மிகப்பெரிய ஆளுமைகளில் இருவர் கமல்ஹாசனும், இயக்குனர் மணிரத்னமும். இவர்கள் இருவரும் நாயகன் படத்திற்கு பிறகு சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள படம் தக்லைஃப்.
கமல் பேச்சால் கொந்தளித்த கன்னட அமைப்புகள்:
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 5ம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து, இன்று முதல் இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் தீவிரமாக ரசிகர்கள் டிக்கெட்டை புக் செய்து வருகின்றனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தமிழில் இருந்து பிறந்த கன்னடம் என்று கமல்ஹாசன் பேசியதற்கு கன்னட அமைப்புகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசன் தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், கமல்ஹாசன் தன்னால் மன்னிப்பு கேட்க இயலாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
தக்லைஃப் படத்திற்கு தடை:
இந்த நிலையில், கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட கன்னட அமைப்புகள் தாெடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தக் லைஃப் படத்தை கர்நாடகவில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. க்ர்நாடக திரைப்பட வர்த்தக கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கும் வரை தக்ஃலைப் படம் கர்நாடகாவில் திரையிடப்படாது என்று தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் கர்நாடகாவில் மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கன்னடத்திற்கு மிகப்பெரிய நீண்ட வரலாறு உள்ளது என்றும், அது கமல்ஹாசனுக்கு தெரியாது என்று விமர்சித்தார்.
ஷாக்கில் படக்குழு:
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் திடீரென கர்நாடகா முழுவதும் திரையிடப்படாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது படக்குழுவினருக்கும், கமல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், பெங்களூரில் ஏராளமான தமிழர்கள் உள்ளனர். மேலும், தமிழ் படங்களுக்கு பெங்களூரில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த சூழலில் கர்நாடகாவில் தக்ஃலைப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை அனைவருக்கும் ஏற்படுத்தியுள்ளது.
நட்சத்திர பட்டாளங்கள்:
கமல்ஹாசன் - சிம்புவும் இணைந்து இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு நடித்துள்ளார். இவர்களுடன் த்ரிஷா, அபிராமி, நாசர். ஜோஜு ஜார்ஜ், அசோக்செல்வன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
படத்தின் ட்ரெயிலர் ஏற்கனவே ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக நாயகன் பாணியில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் ட்ரெயிலரில் கமல்ஹாசனும், சிம்புவும் மோதிக்கொள்ளும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியிலும் வெளியாகியுள்ளது.





















