PBKS Vs MI: பவரை காட்டுமா பஞ்சாப்? பழிதீர்க்குமா மும்பை? ஃபைனலில் ஆர்சிபி உடன் மோதப்போவது யார்?
IPL 2025 PBKS Vs MI Qualifier 2: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் இன்று மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.

IPL 2025 PBKS Vs MI Qualifier 2: இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையரில் வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும்.
ஐபிஎல் 2025: குவாலிஃபையர் 2
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மிச்சம் உள்ளன. அதன்படி, பெங்களூரு அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது. அதனை எதிர்த்து விளையாடப்போவது யார் என்பதை உறுதி செய்யும், இரண்டாவது குவாலிஃபையர் போட்டி இன்று நடைபெற உள்ளது. அகமதாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற உள்ளது.
பஞ்சாப் - மும்பை மோதல்:
லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் அணி, முதல் குவாலிஃபையரில் பெங்களூரு அணியிடம் தோற்றது. அதேநேரம், எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு மும்பை அணி முன்னேறியுள்ளது. இன்றைய போட்டியில் வென்று, 2020ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேற மும்பை முனைப்பு காட்டுகிறது. அதேநேரம், 2014ம் ஆண்டுக்குப் பிறகு ஒருமுறை கூட பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இன்றைய போட்டியின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர்.
பஞ்சாப் - மும்பை: பலம், பலவீனம்
பஞ்சாப் அணி லீக் சுற்றில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால், முக்கியமான குவாலிஃபையரில் பேட்டிங்கில் மொத்தமாக சொதப்பியது. போதுமான அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. பிளேயிங் லெவனில் 6 பேர் அன் - கேப்ட் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்றைய போட்டியில் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம். அழுத்தத்தை கையாண்டால் மும்பை அணியை எதிர்கொள்வது எளிதாகலாம்
இதற்கு நேர் எதிராக இந்திய அணியின் முக்கிய அனுபவம் வாய்ந்த நட்சத்திர வீரர்கள் மும்பை அணியில் குவிந்துள்ளனர். பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என அனைத்து தரப்பினரும் நல்ல ஃபார்மில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இன்றைய போடிட்யில் வெல்ல இரு அணிகளும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
பஞ்சாப் - மும்பை: நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 33 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை அணி 17 முறையும், பஞ்சாப் அணி 16 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் அதிகபட்சமாக பஞ்சாப் 230 ரன்களையும், குறைந்தபட்சமாக மும்பை அணி 87 ரன்களையும் சேர்த்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் மோதிய போட்டியில், பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் மைதானம் எப்படி?
நடப்பாண்டு தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான களமாக அகமதாபாத் மைதானம் அமைந்துள்ளது. 200 ரன்கள் குவிப்பது எளிதாக இருக்கின்றன. போட்டி முழுவதும் மைதானம் ஒரேமாதிரியகா இருப்பதால், கடினமான இலக்குகளை சேஸ் செய்வதும் எளிதாக உள்ளது. எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்கின்றனர்.
உத்தேச பிளேயிங் லெவன்:
பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ் (WK), ஷ்ரேயாஸ் ஐயர் (C), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஹர்பிரீத் ப்ரார், கைல் ஜேமிசன், அர்ஷ்தீப் சிங்.
இம்பேக்ட் பிளேயர்: விஜய்குமார் வைஷாக்
மும்பை: ஜானி பேர்ஸ்டோவ் (WK), ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (C), நமன் திர், மிட்செல் சான்ட்னர், ராஜ் பாவா, ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா, ரிச்சர்ட் க்ளீசன்.
இம்பேக்ட் பிளேயர்: அஸ்வினி குமார்




















