வெட்டி வீராப்பு பேசக்கூடாது.. படம் ஏன் இயக்குவதில்லை? மனம் திறந்த சேரன்
பிரபல இயக்குனர் சேரன் தான் ஏன் படம் இயக்குவதில்லை என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் சேரன். பாரதி கண்ணம்மா படம் மூலமாக இயக்குனரான இவர் வெற்றி கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் என இவர் இயக்கிய படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.
நான் படம் எடுக்க மாட்டேனா?
இந்த நிலையில், இவர் சமீபத்தில் ரமேஷ்கண்ணாவுடன் நேர்காணல் ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் என்னமோ படம் எடுக்கமாட்டேன், எனக்கு வேண்டாம் என்று சொல்வது போல நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். மக்கள் எதிர்பார்க்கிறார்கள் ஓகே. தயாரிப்பாளர்களும், திரைத்துறையும் எதிர்பார்க்கிறதா? அது இல்லை.
வெட்டி வீராப்பு பேசக்கூடாது:
வெட்டி வீராப்பு பேசக்கூடாது. உண்மையை பேச வேண்டும். நானே ஒரு தயாரிப்பாளரை பிடித்து படம் எடுத்தாக வேண்டும் என்ற வேலையில்தான் இருக்கிறேன். என்னாலும் திரைப்படம் எடுக்காமல் இருக்க முடியாது. அதற்கான வேலையில் இருக்கிறேன். ஆனால், அதை சுலபமாக எடுக்க முடியவில்லை.
முதலில் மூத்த இயக்குனர்கள். இவர்களிடம் போய் வேலை செய்ய முடியுமா? இவர்கள் நமக்கு ஏற்ற மாதிரி வேலை பார்ப்பார்களா? இவர்களிடம் நாம் திருத்தங்கள் சொல்ல முடியுமா? நம் கட்டுப்பாட்டில் இருப்பார்களா? என்ற கேள்விகள் உள்ளது. அதில் நாம் தவறு.
ஆஃப்சன்தான் சேரன்:
இவர் படம் பண்ணி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இன்று படம் பண்ணியவர்களுடன் நாம் இணைந்தால் வெற்றி உத்தரவாதம். சேரன் நல்ல இயக்குனர், ஆனால், அவர் படம் செய்து ரொம்ப நாளாகிவிட்டது. இதனால், நாம் வேறு ஆஃப்சனுக்கு போய் விடலாம். அவருடைய பழைய மாதிரி படம் ஒர்க் அவுட் ஆகுமா? இது எல்லாம் நம் மனதில் உள்ளது என்பது நமக்குத் தெரியாது.
அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் நாம் பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப் மாதிரி படம் மாதிரிதான் எடுப்போம் என்று நினைக்கிறார்கள். நான் ஆட்டோகிராஃப் மாதிரியும் எடுப்பேன். இந்த படங்கள் எடுத்து முடித்து தியேட்டருக்கு போகும்போது நமக்கு நெருக்கடி உள்ளது. பொருளாதார இழப்பீடு ஆகாம படத்தை வெற்றியடைய வைக்க நமக்கு ஒரு தயாரிப்பாளர் தேவை. தயாரிப்பாளர்கள் இப்போது பயப்படுகிறார்கள். இவருடன் படம் பண்ணினால் இவருக்கு நிறைய கடன் இருக்குமோ, அது ஏதும் படத்தை நிறுத்திவிடுமோ? என்ற எண்ணம் உள்ளது. இது யதார்த்தம். இதை எல்லாம் நான் சரி செய்துவிட்டு நான் படம் பண்ணனும்.
இவ்வாறு அவர் கூறினார்.





















