(Source: ECI/ABP News/ABP Majha)
Vitamin K: சரும ஆரோக்கியத்திற்கு வைட்டமின் பி தெரியும்… வைட்டமின் 'கே'யில் இவ்வளவு நன்மையா? சாப்பிடவேண்டிய 6 உணவுகள்!
வைட்டமின் கே சரும வீக்கம் மற்றும் சிவத்தல் ஆகியவற்றைக் குறைப்பதோடு, வறண்ட சருமம் மற்றும் கருவளையங்களைத் தடுக்கவும் உதவும். அதோடு சுருக்கம் வராமல், வயதான தோற்றத்தைத் தடுக்கவும் உதவும்.
நமது சருமம் ஆரோக்கியமாகவும், தெளிவாகவும், பளபளப்பாகவும் இருக்க பல ஊட்டச்சத்துக்கள் அதற்கு தேவைப்படுகிறது. குறிப்பாக சூரியன் சுட்டெரிக்கும் வெயில் நேரங்களில் அவை இன்றியமையாதவை. அதாவது, நீங்கள் சரியான உணவை தேவையான அளவில் சாப்பிடுகிறீர்கள் என்பது அவசியம். அந்த சரியான உணவுகள் எது என்கிறீர்களா? வைட்டமின்களில், தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு வைட்டமின் பி நன்மைகள் பற்றி பலரும் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் நாம் கவனம் செலுத்த வேண்டிய இன்னொரு வைட்டமின் உள்ளது. அதுதான் வைட்டமின் கே. இது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். இதில் இரண்டு வடிவங்கள் உள்ளன, அவை கே1 மற்றும் கே2. ஆரோக்கியமான இதயம் மற்றும் எலும்புகளுக்கு வைட்டமின் கே மிகவும் அவசியம். அதோடு இது சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
தோல் ஆரோக்கியத்தில் எப்படி வைட்டமின் கே செயல்படுகிறது?
வைட்டமின் கே காயங்கள் வேகமாக குணமடைய உதவும். இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்படுவதால், இது உங்கள் சருமத்தை நீண்ட கால பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும். இந்த வைட்டமின் சரும வீக்கம் மற்றும் சிவத்தல் ஆகியவற்றைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. இது வறண்ட சருமம் மற்றும் கருவளையங்களைத் தடுக்கவும் உதவும். அதோடு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தவிர்த்து, வயதான தோற்றத்தைத் தடுக்கவும் உதவும்.
வைட்டமின் கே உள்ள 6 உணவுகள் இங்கே:
- ப்ரோக்கோலி
வைட்டமின் கே1 அல்லது பைலோகுவினோன் பொதுவாக பச்சை இலைக் காய்கறிகளில் காணப்படுகிறது. ப்ரோக்கோலி சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் அதே வேளையில், மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. ப்ரோக்கோலியில் வயது முதிர்வு எதிர்ப்பு பண்புகள் உள்ளன, ஏனெனில் அதில் லுடீன் உள்ளதால், அது ஆக்ஸிஜனேற்ற சேதத்தைத் தடுக்க உதவும். இதில் சல்போராபேன் உள்ளதால், இது சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது.
- கீரை
கீரையை உட்கொள்வது தோல் ஆரோக்கியம் உட்பட பல நன்மைகளுக்கு வழி வகுக்கிறது. அரை கப் சமைத்த கீரை சுமார் 440 mcg 'வைட்டமின்-கே'வை வழங்குவதாக கூறப்படுகிறது! தெளிவான, பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெற இவை அனைத்தும் அவசியம். கீரை சாப்பிடுவது உங்கள் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருப்பதோடு, கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும் என்பதால், ஃப்ரீ ரேடிக்கல் மற்றும் UV பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்கும்.
- மாதுளை
பழங்களை பொருத்தவரை மாதுளையில் ஒப்பீட்டளவில் அதிக அளவு வைட்டமின் கே உள்ளது. இந்த பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும வீக்கத்தைக் குறைக்கவும், உங்கள் சருமத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவும். வயதான தோற்றத்தையும் குறைக்கும். கூடுதலாக, தோல் பராமரிப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாக மாதுளையின் விதைகள் மற்றும் சாறுகள் பெரும்பாலும் தோல் மீது அப்ளை செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன.
- கிவி
கிவி பழங்கள் 'வைட்டமின்-கே'வை கொண்டுள்ள நல்ல பழமாகும். இதில் வைட்டமின்கள் சி மற்றும் ஈ, லுடீன், ஜியாக்சாண்டின் மற்றும் பாலிபினால்கள் கூட உள்ளன, இவை அனைத்தும் சரும ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன. இந்த பழம் சருமத்தை கரும்புள்ளிகள் மற்றும் சூரிய பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கின்றன.
- மூலிகைகள்
பார்ஸ்லி, துளசி, ஆரிகேனோ, கொத்தமல்லி, போன்றவற்றை காயவைத்து பயன்படுத்தப்படும் மூலிகைகள் வைட்டமின் K1 இன் சிறந்த ஆதாரங்களாகும். இவற்றை அதிகமாக உட்கொள்ள முடியாது என்றாலும், சாலடுகள், முட்டை, தின்பண்டங்கள் போன்றவற்றை சீசன் செய்ய அவற்றைப் பயன்படுத்தலாம். மேலும் இந்த மூலிகைகள் மற்ற முக்கிய ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகவும் உள்ளது.
- பால் பொருட்கள்
வைட்டமின் K2 அல்லது மெனாகுவினோன்கள் கொழுப்புள்ள பால், முட்டை மற்றும் குறிப்பிட்ட வகை சீஸ், பனீர் போன்ற பால் பொருட்களில் உள்ளன. ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கும் பிற வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களிலும் அவற்றில் நிறைந்துள்ளன. இருப்பினும், பால் பொருட்கள் சிலருக்கு பிற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, உங்கள் உணவில் மாற்றங்களைச் செய்வதற்கு முன் ஒரு நிபுணரை அணுகுவது நல்லது.