WTC Final: 120 ஆண்டுகால சாதனையை முறியடிக்குமா இந்தியா?.. ஓவல் மைதானத்தில் டெஸ்ட் சேஸிங் சாதனை தெரியுமா..!
இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணி வெற்றி பெற 120 ஆண்டுகால சாதனையை தகர்க்க வேண்டியுள்ளது.
இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணி வெற்றி பெற 120 ஆண்டுகால சாதனையை தகர்க்க வேண்டியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி:
இரண்டாவது முறையாக நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதுகின்றன. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி ரகானே மற்றும் ஷர்தூல் தாக்கூரின் பொறுப்பான ஆட்டத்தால் 296 ரன்களை சேர்த்தது.
இமாலய இலக்கு:
173 ரன்கள் முன்னிலை பெற்று ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை சேர்த்துள்ளது. இதன் மூலம் தற்போது வரை 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. எப்படியும் நான்காவது நாளில் பாதி நேரம் வரை பேட்டிங்கை தொடர்ந்து, 400 ரன்கள் வரை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயிக்க ஆஸ்திரேலிய அணி முனைப்பு காட்டும். இதனால், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்ற இமாலய இலக்கை எட்டிப்பிடிக்க வேண்டி இருக்கும்.
120 ஆண்டுகால சாதனை..
அந்த இமாலய இலக்கை எட்டிபிடிக்க இந்திய அணி 120 ஆண்டுகால சாதனையை தகர்க்க வேண்டி இருக்கும். ஆம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு என்பது 263 ரன்கள் மட்டுமே. அதுவும், 1902ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி வெற்றிகரமாக இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்றது. அதன்பிறகு 41 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 1963ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணிதான் இரண்டாவது அதிகபட்சமாக 253 ரன்களை வெற்றிகரமாக எட்டியது.
21ம் நூற்றாண்டின் இலக்கு:
நடப்பு நூற்றாண்டில் வெறும் இரண்டு அணிகள் மட்டுமே ஓவல் மைதானத்தில் நான்காவது இன்னிங்ஸில் இலக்கை துரத்தி வெற்றி பெற்றுள்ளன. அதன்படி, 2008ம் ஆண்டு தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 197 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி எட்டியது. அதைதொடர்ந்து, கடந்த 2010ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 148 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்துள்ளது. இந்த நிலையில் தான், ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் 300 ரன்களுக்கும் அதிகமான இலக்கை இந்திய அணி சேஸ் செய்ய வேண்டியுள்ளது.
இந்தியாவும்..சேஸிங்கும்..
இந்தியா டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக 403 ரன்கள் எனும் இலக்கை, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அந்த நாட்டிலேயே கடந்த 1976ம் ஆண்டு சேஸ் செய்தது. அதைதொடர்ந்து, சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2008ம் ஆண்டு 387 ரன்களையும், கடந்த 2021ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதன் சொந்த நாட்டிலேயே 329 ரன்கள் என்ற இலக்கையும் வெற்றிகரமாக எட்டியது. அதேநேரம், இந்த ஓவல் மைதானத்தில் தான் கடந்த 1971ம் ஆண்டு இங்கிலாந்து அணியை வீழ்த்தி, அந்த நாட்டில் இந்திய அணி முதல்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.