ADMK PMK Alliance | "மிஸ் பண்ணிட்டீங்களே இபிஎஸ்"அன்புமணிக்கு ஒரு சீட் புலம்பி தீர்க்கும் நிர்வாகிகள்
அதிமுக பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கி கூட்டணியை உறுதி செய்திருக்கலாம் என குரல்கள் எழுந்துள்ளன.
தமிழ் நாட்டில் உள்ள 6 எம்.பி-க்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதி முடிவடைய உள்ளது. இச்சூழலில், ராஜ்யசபா தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்தவகையில், ஜூன் 9 ஆம் தேதியே மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என்று கூறப்பட்ட நிலையில் திமுக வேட்பாளர்களாக பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் என்கிற கவிஞர் சல்மா மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சின் தலைவர் கமல் ஆகியோரை அறிவித்தது. அதிமுக சார்பில், இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக தலைவர் தனபால் ஆகியோரும் அறிவிக்கப்பட்டனர்.
அதேபோல், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் பேட்டியிட தேமுதிகவிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது. ஆனால் கடந்த முறை மாநிலங்களவை பதவியை பாமக தலைவர் அன்புமணிக்கு அதிமுக ஒதுக்கியது. இந்த முறையும் அவருக்குத்தான் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு எம்.பி. பதவியும் அதிமுகவிற்கே ஒதுக்கப்பட்டது. முன்னதாக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், வடதமிழ்நாட்டில் பாமகவின் வாக்கு வங்கி மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.கடந்த 2021 தேர்தலில் சேலம், தர்மபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கணிசமான இடங்களை வென்றோம். வட தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் கடுமையான போட்டியை திமுகவிற்கு கொடுத்தோம்.
இந்த முறை இந்த கூட்டணியில் பாமக வந்தால் வடதமிழ்நாட்டில், மிகப்பெரிய வெற்றியை அதிமுகவால் கொடுக்க முடியும். அன்புமணி ராமதாஸின் எம்.பி பதவி காலம் முடிந்துள்ளது. அவரது பதவியை மீண்டும் அவரிடமே கொடுத்திருக்கலாம். அப்படி கொடுத்திருந்தால் குறைந்த தொகுதியில் 2026-இல் பாமகவை வளைத்து போட்டு இருக்கலாம். குறிப்பாக அன்புமணிக்கு பதவி கொடுத்திருந்தால், வேட்பு மனு தாக்கல் செய்யும்போது நயினார் நாகேந்திரன், இபிஎஸ் மற்றும் அன்புமணி என மூவரும் ஒரே நேரத்தில் தோன்றியிருப்பார்கள். இதன் மூலம் கூட்டணியையும் எளிதாக உறுதிப்படுத்தி இருக்கலாம். இந்த வாய்ப்பை ஏன், தலைமை தவறவிட்டது என புலம்பி வருகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.





















