திருச்சி: 50 ஆண்டுகளாக இப்படி ஒரு Fun பாய்ண்ட்.. காலை முதல் இரவு வரை பால், பட்டர் பன்கள்
திருச்சி பொன்மலையில் உள்ள அருணா பால் டிப்போவில் கிடைக்கும் பட்டர் பன் கடையைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்...
திருச்சி பொன்மலை என்று கூறினாலே நமக்கு நினைவில் வருவது பொன்மலை ரயில்வே பணிமனைதான். இந்த பணிமனையில் டார்ஜிலிங்கில் இயங்கும் மலை ரயிலுக்கான எஞ்சின் உருவாக்கி கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் மொசாம்பிக் போன்ற நாடுகளுக்கும் எஞ்சினில் சில மாற்றங்களை செய்து கொடுத்துள்ளது. இதைப் போன்ற இன்னும் ஏராளமான சிறப்புகள் பொன்மலைக்கு உள்ளன. இதுபோன்று ரயில்வேயில் ஆரம்பித்து ஞாயிறு அன்று கூடும் சந்தை வரை பல்வேறு சிறப்புகள் பொன்மலையில் இருக்கும் போதும், இதை எல்லாம் தாண்டி மற்றொரு சிறப்பு 50 ஆண்டு காலமாக இங்கு கிடைக்கும் பட்டர் பன்தான். அருணா பால் டெப்போவில் கிடைக்கும் பட்டர் பன் தான் இன்று பெரும்பாலானோருக்கு ஃபேவரிட் ஆக உள்ளது. இங்கு கிடைக்கும் இந்த பட்டர் பன் சுவை ஆங்கிலோ இந்தியர்களுக்கு இது மிகவும் பிடித்த காரணத்தினால் அவர்களது வீட்டு விசேஷங்களுக்கு இந்த பட்டர் பன் இடம்பெறாத பொழுதே இல்லை என்கின்றார்கள் பொதுமக்கள். அத்தகைய சுவை மிகுந்த இந்த பட்டர் பன் விடியற்காலையில் இருந்து இரவு வரை எப்போது சென்றாலும் கிடைக்கும்.
பொன் மலைக்கு சென்று யாரிடம் கேட்டாலும் பட்டன் கடையை சரியாக கூறிவிடுவார்கள். பொதுவாக பட்டர் பன் என்றால் வெட்டப்பட்ட பன்னின் இடையே தடவப்பட்ட வெண்ணெய் சேர்த்து சிறிது கிரீமையும் வைத்து தயாரித்து வைத்திருப்பர். ஆனால் இந்த கடையில் சற்று வித்தியாசமாகவே பட்டர்பன் என்று கேட்டால் உடனே பன்னை எடுத்து நான்காக வெட்டி சுமார் 25 கிராம் வெண்ணையை அப்படியே கட்டி ஆக வைத்து கொடுக்கிறார்கள். இந்த வெண்ணையை தரமாக தரவேண்டும் என்பதன் காரணமாகவே தனியாக வெண்ணையை இவர்கள் தயாரிக்கின்றனர். இதன் காரணமாக தரமான வெண்ணை என்பதால் அதன் சுவை அமோகமாக இருப்பதாக அங்கே வரும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வெண்ணெய் பிடித்தவர்களுக்கு நிச்சயமாக இந்த பட்டர் பன் பிடித்துவிடும். இந்த பட்டர் பன் சாப்பிட்டுவிட்டு ஒரு டீ குடித்தால் இதன் இரண்டு காம்பினேஷனும் சிறப்பாக இருக்கும் என்று கூறுகிறார் கடையின் உரிமையாளர். அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு செயற்கைத்தன்மையும் இல்லாமல் இயற்கையாகவே தயாரிக்கப்பட்ட வெண்ணெய்தான் இதிலுள்ள சிறப்பாக உள்ளது.
மேலும் பிரத்தியேகமாக இங்கு இந்த பன் தயாரிக்கப்படுகின்றது. இதன் காரணமாகவே ஒரு நாளைக்கு 500-க்கும் மேற்பட்ட நபர்கள் தினமும் இங்கு வந்து செல்கின்றனர். மற்ற பேக்கரி பொருட்கள் இங்கு கிடைத்தாலும் இந்த கடையில் தொடர்ந்து விற்பனையாவது இந்த பட்டர் பன்தான். மேலும் இங்கு ஆங்கிலோ இந்தியர்கள் அதிகமாக வசித்து வந்தனர். அவர்களுக்கும் இந்த பட்டர் பன் பிடித்துப்போக அவர்கள் வீட்டு விசேஷங்களில் இந்த பட்டர் பன்னை ஆர்டர் செய்து அதை அவர்கள் வீட்டு விருந்தில் இடம்பெற வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைப்பற்றி கடை உரிமையாளரிடம் கேட்டபோது, ”இந்த கடை 1970இல் ஆரம்பித்ததாக தெரிவித்தார். மேலும், தனக்கு முன்னால் இருந்தவர்கள் இந்த பன் செய்து கொடுத்துக் கொண்டு இருந்தாலும், சின்ன வயதிலிருந்து சாப்பிட்ட எனக்கு இந்த வெண்ணை பன் சுவை மிகவும் பிடிக்கும். அதையே தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். அதனால்தான் தரமான வெண்ணை பயன்படுத்துகின்றோம். அது மட்டுமல்லாமல் இன்னும் விறகு அடுப்பில் தான் இந்த பன் தயாரிக்கிறோம். எனவே இயற்கையாக செயற்கைப் பொருள் எதையும் சேர்க்காத காரணத்தினால் இதை அதிக நாள் வைத்து சாப்பிட முடியாது என்று கூறுகிறார். வரும் வாடிக்கையாளர்களிடம் இதை சொல்லித்தான் கொடுக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இதை சாப்பிடுபவர்கள் இதன் சுவை மிகவும் பிடித்து போய் மீண்டும் மீண்டும் வருவார்கள்” என்று கூறுகிறார்.
மேலும் வெளியூரிலிருந்து வருபவர்கள் கூட இங்கு வந்து இந்த பட்டர் பன் சாப்பிடும்போது மனதிற்கு மிகவும் மகிழ்வாக இருக்கும் என்று கடையின் உரிமையாளர் கூறுகிறார். இந்த கடையில் பட்டர் பன் மட்டுமல்லாமல் கிறிஸ்துமஸ் அன்று கிடைக்கக்கூடிய ப்ளம் கேக்கும் மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் இந்த அருமையான பட்டர் பன் 25 ரூபாயில் கிடைக்கின்றது என்றால் அதுவும் மகிழ்ச்சிதானே. மொத்தத்தில் பன் மற்றும் வெண்ணை பிரியர்களுக்கு இந்த பட்டர் பன் காம்பினேஷன் நினைவில் நிற்கும் சுவையாக இருக்கும்.