Navratri 2022: நவராத்திரி திருவிழா நாட்களில் செய்யக்கூடிய சத்துமிக்க உணவு வகைகள் என்ன?
வழக்கமாக மைதா மாவில் செய்யும் போலி என்ற இனிப்புக்கு பதிலாக பாசிப்பயறு, கம்பு அல்லது கேழ்வரகில் போலிகளை செய்யலாம்
பொதுவாக விசேஷங்கள் என்றாலே வீடுகளில் குடும்பமாக இணைந்து, விரதங்கள் இருப்பது,தெய்வங்களை வணங்குவது மற்றும் தயார் செய்து வைத்திருக்கும் உணவுகளை குடும்ப உறுப்பினர்களுடன் உண்டு மகிழ்வது என நம் வீடு கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். இதே அளவு கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இந்த திருவிழா காலங்களில் ,உங்கள் உடலானது இருக்கிறதா என்பதை நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரை,மாறி வரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப, இனிப்புகள்,பலகாரங்கள், குளிர்பானங்கள், மற்றும் ஹோட்டல்களில் வாங்கும் உணவுகள் என உழைப்பை சுருக்கி கொண்டு, நமக்கு நாமே தேவையில்லாத பின் விளைவுகளை கொண்டு வந்து விடுகிறோம். கடைகளில் வாங்கும் உணவுகளில் சர்க்கரை, தேவையில்லாத எண்ணெய்கள் மற்றும் உணவுக்கு நிறமூட்டக்கூடிய நிறமிகள் என ,நிறைய உடலுக்கு ஒவ்வாத பொருட்கள் இருக்கின்றன.
இத்தகைய பொருட்கள் அன்றைய தினத்தில் உடனடியாக நமக்கு எந்த கெடுதலையும் செய்யாவிட்டாலும் கூட, நாட்பட நாட்பட, இத்தகைய உணவுகள் உடலை பாழ்படுத்துகின்றன. ஆகையால் இத்தகைய உணவுகளை தவிர்த்து,நாட்டுச்சக்கரை,வெல்லம் மற்றும் பனைவெல்லம் போன்ற, இயற்கை ரசாயன கலப்பில்லாத இனிப்புகளை கொண்டு,வீட்டிலேயே இனிப்புகளை செய்திடுங்கள்.
வழக்கமாக மைதா மாவில் செய்யும் போலி என்ற இனிப்புக்கு பதிலாக பாசிப்பயறு, கம்பு அல்லது கேழ்வரகில் போலிகளை செய்து பாருங்கள். கடைகளில் வாங்கும் இனிப்புக்களுக்கு பதிலாக, பனைவெல்லத்தினால் வீட்டிலேயே கடலை மிட்டாய் செய்து பாருங்கள்.
வழக்கமாக செய்யும் இட்லி,தோசை போன்ற உணவுகளுக்கு பதிலாக, கம்பு,புட்டு மற்றும் கேழ்வரகு இடியாப்பம் என உங்கள் சமையல் முறைகளை சற்றே மாற்றி அமையுங்கள்.
இதே போல பருப்பு அடையை செய்யுங்கள்:
பொதுவாக நாம் எந்த இடத்தில் வசிக்கின்றோமோ ,அந்த தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ற உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
இதிலும் கீரைகள் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை கொண்டு, உங்கள் பண்டிகை நாட்களை சிறப்பாக கொண்டாடுங்கள். முடக்கத்தான்,தூதுவளை மற்றும் வல்லாரை போன்ற கீரை வகைகள் கிராமப்புறங்களை தவிர்த்து, சென்னை போன்ற மாநகரங்களிலும் தாராளமாக கிடைக்கின்றது.
உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் கீரையை நேரடியாக உண்ணவில்லை என்றால், பருப்பு அடையில் மேற் சொன்ன கீரைகளை கலந்து செய்யலாம்.இதைப் போலவே முருங்கைக் கீரையை கேழ்வரகு அடை தயாரிக்கும் போது சேர்த்து செய்யலாம். இத்தகைய பண்டிகை நாட்களில், நாட்டுச் சர்க்கரை அல்லது பனைவெல்லத்தை பயன்படுத்தி கேரட்,பீட்ரூட் மற்றும் பூசணிக்காயை கொண்டு அல்வா,போன்ற இனிப்புகளை செய்யலாம்.இதனால் வீட்டில் இருக்கும் குழந்தைகள் கூட உணவுகளை விருப்பத்துடன் சாப்பிடுவார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை கொய்யாப்பழம்,பப்பாளி, வாழைப்பழம்,நாவல் பழம்,பலாப்பழம் மற்றும் மாதுளம் பழம் என அந்தந்த கால நிலைக்கு ஏற்றார் போல பழங்கள் நிறைய கிடைக்கின்றன.
இத்தகைய பழங்களை சாலட் எனப்படும்,பழ கலவைகளாக செய்து உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பரிமாறுங்கள். ஆரம்ப நாட்களில் பெரியவர்களும்,குழந்தைகளும் இதை சாப்பிடுவதற்காக இதனுடன் சிறிது ஐஸ் கிரீம் கலந்து கொள்ளலாம்.நாளடைவில் ஐஸ்கிரீமை,பழக்கலவையுடன் சேர்ப்பதை நிறுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு இந்த நவராத்திரி திருவிழாவை சத்து மிகுந்த உணவுகளான காய்கறி,கீரை, பழங்கள் மற்றும் தானியங்களோடு சிறப்பாக கொண்டாடுங்கள்.