Dharmendra Pradhan: சந்திர பாபு ஒரு தலைவர், அப்படியே ஸ்டாலினை பாருங்க - கிழித்து தொங்கவிட்ட தர்மேந்திர பிரதான்
Dharmendra Pradhan: மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அரசியல் சூழ்ச்சி செய்வதாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டியுள்ளார்.

Dharmendra Pradhan: முதலமைச்சர் ஸ்டாலினின் சிந்தனையில் தான் பிரச்னை உள்ளது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாடியுள்ளார்.
ஏபிபி கல்வி மாநாடு:
கல்வியில் உலகளாவிய தலைவராக மாறுவதே இந்தியாவின் குறிக்கோளாக உள்ளது. அதற்கான ஆலோசனைகளை விவாதிக்கும் களமாக ABP Live SmartEd Conclave 2025 டெல்லியில் அரங்கேறியது. இந்தியாவின் கல்வி முறையை திறமை, மாற்றம் மற்றும் தொழில்நுட்பத்தின் கண்ணோட்டத்தில் மறுபரிசீலனை செய்யும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது. நாட்டின் மிக முக்கியமான கல்வி கொள்கை வகுப்பாளர்கள், சிந்தனைத் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப கல்வி முன்னோடிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தலைமை விருந்தினராக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்று, நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
சந்திரபாபு நாயுடுவை பாராட்டிய தர்மேந்திர பிரதான்
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தேசிய கல்விக் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது. இது எந்த மாநிலத்திலும் எந்த மொழியையும் குழந்தைகள் மீது திணிக்கவில்லை. மும்மொழிக்கொள்கை என்பது முன்பு இருந்தது, இப்போது இருக்கிறது. தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலமும் இதை எதிர்க்கவில்லை. இந்த விவகாரத்தில் நான் இரண்டு பேர் குறித்து விளக்க வேண்டும். எனது மாநில குழந்தைகள் 10 மொழிகளை கற்க வேண்டும் என நான் விரும்புகிறேன் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். எனது மாநில குழந்தைகள் சர்வதேச போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில் தயாராக வேண்டும் என குறிப்பிடுகிறார். அத்தைகைய குழந்தைகளே இந்தியாவிற்கும் தேவை என குறிப்பிட்டு ஒரு சிறந்த தலைவராக சந்திரபாபு நாயுடு திகழ்கிறார்.
ஸ்டாலின் பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார் - தர்மேந்திர பிரதான்
அதேநேரம், தமிழ்நாட்டில் மாநில அரசின் பள்ளிகளிலேயே 3 மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. அவர்களின் தாய்மொழி தமிழ் கற்பிக்கப்படுகிறது. ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. மூன்றாவது மொழியாக தெலுங்கு, உருது, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. கல்விக்காக அதிகம் செலவு செய்யக்கூடியவர்கள் இந்தியை கூட கற்கின்றனர். ஸ்டாலினின் சிந்தனையில் தான் எனக்கு பிரச்னை உள்ளது. அனைத்து விவகாரங்களிலும் பாதிக்கப்பட்டவர்களை போன்றே செயல்படுகின்றனர். டெல்லியை விமர்சிக்க வேண்டும், இந்தியை விமர்சிக்க வேண்டும் என்பது 60களில் இருந்தது. ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. இங்கு இருந்து தமிழகம் சென்ற பீகார் மாணவி தமிழில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்.
எனவே இந்திய மொழிகள் சமமானவை. எல்லா மொழிகளும் நம்மை ஒருவரோடு ஒருவரை இணைக்கிறது. ஆனால், ஒரு மாநிலம் மும்மொழிக்கொள்கையை எதிர்க்கிறது. இது ஒரு அரசியல் சூழ்ச்சி” என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சித்துள்ளார்.





















