EPS ADMK: அடிச்சு தூக்கும் பாஜக, மதிக்காத அமித் ஷா? அதிமுகவை காப்பாற்றுவாரா? விட்டுக்கொடுப்பாரா ஈபிஎஸ்?
EPS ADMK: உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சால் அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி தொடருமா? என்ற கேள்வி தமிழக அரசியலில் எழுந்துள்ளது.

EPS ADMK: எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு நேர் எதிராக உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிளப்பிவிட்ட அமித் ஷா
மதுரை ஒத்தக்கடையில் நடந்த பாஜக நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாபங்கேற்றார். அப்போது பேசுகையில், தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை திமுக தலைமையிலான அரசின் மீது சுமத்தினார். தொடர்ந்து,மதுரை பலவிதமான மாற்றங்களுக்கு வித்திடும் மண். அந்தவகையில், இன்று நடந்துள்ள இந்த ஆலோசனைக் கூட்டமும், திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து வீட்டுக்கு அனுப்பும் மாற்றத்தைக் கொண்டு வரும். 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும்” என பேசினார்.
கூட்டணி ஆட்சிக்கு ”நோ” சொன்ன அதிமுக
முன்னதாக, கடந்த முறை அமித் ஷா தமிழ்நாடு வந்திருந்தபோது, அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் என அறிவித்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் இருந்தார். அதனைதொடர்ந்து, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா கூறியதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி, “ கூட்டணி அரசு என்று சொல்லவில்லை. தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லவே இல்லை. டெல்லிக்கு பிரதமர் மோடி. தமிழ்நாட்டிற்கு என் பெயரைச் சொன்னார்” என குறிப்பிட்டார். அக்கட்சியின் மூத்த தலைவர் தம்பிதுரை பேசுகையில், ”2026ல் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தனியாக தான் ஆட்சி நடத்துவார். கூட்டணி ஆட்சி என்பதற்கு இடமே கிடையாது” என திட்டவட்டமாக பேசியிருந்தார். இந்நிலையில் தான், தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என அமித் ஷா உறுதியாக பேசியுள்ளார்.
அதிருப்தியில் எடப்பாடி பழனிசாமி?
தமிழ்நாட்டில் தங்கள் கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும் என அமித் ஷா கூறினாலும், அதற்கான முக்கியத்துவம் எடப்பாடிக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே அதிமுக வட்டாரத்தில் உள்ளது. அதற்கு உதாரணம் தான், கூட்டணி அறிவிப்பு தொடர்பான நிகழ்ச்சியில் எடப்பாடி ஒரு வார்த்தை கூட பேசாமல், அமித் ஷா மட்டுமே மொத்த அறிவிப்புகளையும் வெளியிட்டதாகும். இந்த சூழலில், கூட்டணி ஆட்சி கிடையாது என கூறி அதிமுக கூறி வரும் நிலையில், அதற்கு நேர் எதிரான அறிவிப்பை அமித் ஷா வெளியிட்டுள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக - பாஜக இடையேயானது பொருந்தாக் கூட்டணி என திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதனை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமித் ஷாவின் பேச்சு அமைந்துள்ளது.
கூட்டணி தொடருமா?
அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட மருது அழகுராஜ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில், “2026ல் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிதான் - அமித்ஷா உறுதி.. அப்ப மானஸ்தர் எடப்பாடி பாஜக வுடனான கூட்டணியை நாளைக்கே முறித்து கொள்வதாக அறிவிப்பாரோ..?'' என கேள்வ்சி எழுப்பியுள்ளார். அதோடு, #கூட்டணி முறியுமோ, #என்னநாஞ்சொல்றது போன்ற ஹேஷ்டேக்குகளையும் பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் ஃபைல்கள்:
அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வசம் சிக்கியுள்ள அதிமுக புள்ளிகள் தொடர்பான ஆவணங்களை வைத்து மிரட்டியே, அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக திமுக குற்றம்சாட்டி வருகிறது. அதில் எடப்பாடி மற்றும் அவரது உறவினர்கள் தொடர்பான வழக்குகளும் அடங்கும் என தெரிகிறது. அதேநேரம், பாஜக உடனான கூட்டணி முடிவு அதிமுகவின் முக்கிய மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கே பிடிக்கவில்லையாம். பாஜகவின் வலியுறுத்தலை ஏற்று கூட்டணி அமைத்தும் தனக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்பதே எடப்பாடியின் குமுறலாகவும் உள்ளதாம். இதனால், வருவதை பார்த்துக்கொள்ளலாம் என கூட்டணியில் இருந்து விலகுவாரா? அல்லது வழக்குகளை ஒதுக்கிதள்ள கூட்டணியை தொடர்வாரா? என்பது அக்கட்சி தொண்டர்களின் கேள்வியாக உள்ளது. மேலும், அதிமுக உடன் கூட்டணி வைத்த சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நிலையை, எடப்பாடி பழனிசாமி கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனராம்.





















