ஹோமியோபதி மருத்துவம் இனி உலகளவில் - மத்திய அரசு தெரிவித்திருப்பது என்ன.?
AYUSH: ஹோமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் மருத்துவ முறைகளை உலக அளவில் கொண்டு செல்ல மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் ஆயுஷ் மருத்துவத்துவம்
சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ஹோமியோபதி மருந்துகளை இந்தியாவிலேயே தயாரித்து உள்நாட்டு தேவைகளுக்கு பயன்படுத்துவதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சியில் மத்திய அரசு அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், இந்த மருத்துவ முறையை பிரபலப்படுத்துவதற்காக மத்திய அரசின் ஆயுஷ் துறை 50 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள நிப்மெட் (NIPMED) மையம் போல் தென் தமிழகத்தில் ஒரு மையத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். குறிப்பாக சரும பாதிப்புகள், முடக்குவாதம், நாள்பட்ட தலைவலி உள்ளிட்ட பாதிப்புகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்து ஆயுஷ் துறை ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்:
ஆயுஷ் துறையின் 100 நாள் சாதனை பற்றி குறிப்பிட்ட ஹோமியோபதி கவுன்சிலின் உதவி இயக்குநர் கொல்லி ராஜூ, ஆயுஷ் மருத்துவத்தை இந்தியாவிலும், உலகளவிலும் பிரபலப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி அதிக முனைப்பு காட்டி வருவதாக தெரிவித்தார். நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை இந்தியா முழுவதும் கொண்டுசெல்ல ஆயுஷ் அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஆயுஷ் மருத்துவத்தை உலகளாவிய சுகாதார சேவையுடன் ஒருங்கிணைக்கும் வகையில் வியட்நாம், மலேசியா உள்ளிட்ட நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ், ஆயுஷ் மருத்துவத்தை பிரபலப்படுத்த தேசிய அளவிலான பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டதுடன், ஃபிட் இந்தியா இயக்கத்தின் கீழ் யோகா பயிற்சியும் பிரபலப்படுத்தப்பட்டதாக கூறினார். நாடு முழுவதும் மூத்த குடிமக்களுக்காக 14,692 ஆயுஷ் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும் கொல்லி ராஜூ குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் ஆராய்ச்சி
தமிழ்நாட்டில் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி, செட்டிநாடு மருத்துவக்கல்லூரி, சங்கர நேத்ராலயா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு 11 ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதுதவிர, பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை தொடர்பாக இஸ்ரேல் நாட்டுடனும் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துடன் வேளாண் சார்ந்த ஹோமியோபதி ஆராய்ச்சிக்காக இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், மணிப்பால் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 12 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதுடன், நொய்டாவில் உள்ள கன்ஷிராம் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் குறுகிய கால மருந்தியல் பயிற்சியும் அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.
சென்னை முட்டுக்காட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறுப்பு அதிகாரி கார்த்திகேயன் பேசுகையில், கடந்த 2018-ம் ஆண்டு முதல் முட்டுக்காடு வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சிகிச்சை தொடர்பாக 3 ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். முட்டுக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கோவளம், கேளம்பாக்கம் ஊராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும், இவர்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ஒரு மாத பணி அனுபவ பயிற்சி வழங்கப்படுவதுடன், கோவளம், கேளம்பாக்கம் பஞ்சாயத்துகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக கார்த்திகேயன் கூறினார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )