பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
அமித்ஷாவின் மதுரை வருகைக்கு முன்பு கூட்டணியில் நிலவி வரும் குழப்பத்தை தீர்க்கும் வகையில் தைலாபுரத்தில் உள்ள பாமக தலைவர் ராமதாஸின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்துள்ளார் ஆடிட்டர் குருமூர்த்தி.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மதுரை வருகை, தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என தமிழக பாஜக பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பக்கா வியூகத்துடன் அமித் ஷா மதுரை வர உள்ளதாகவும் இதையொட்டிதான், தைலாபுரத்தில் பாமக தலைவர் ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்தாகவும் கூறப்படுகிறது.
பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா:
அமித்ஷாவின் மதுரை வருகை குறித்து தகவல் வெளியிட்ட தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத், "கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி சென்னை வந்த பாஜக முன்னாள் தேசியத் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, அதிமுக - பாஜக கூட்டணியை அறிவித்தார்.
இது, திமுகவையும், அதன் கூட்டணி கட்சிகளையும் அலற வைத்துள்ளது. அதன்பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அவரது கூட்டணி தலைவர்கள் அதிமுக பாஜக கூட்டணி பற்றியே பேசி வருகின்றனர். இதனால், தமிழக அரசியலே, ஏப்ரல் 11 அமித்ஷா வருகைக்கு முன்பு, அமித்ஷா வருகைக்கு பின்பு என மாறியுள்ளது.
இப்படி தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்திய அமித்ஷா, வரும் 8ஆம் தேதி சங்கம் வளர்த்த தமிழகத்தின் கலாசார தலைநகரான மதுரைக்கு வருகிறார். அங்கு நடக்கும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு, வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வழிகாட்ட இருக்கிறார்.
இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது:
கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் நீண்ட, நெடிய அரசியல் அனுபவம் கொண்டவர். மக்களோடு மக்களாக எப்போதும் இருந்து அவரின் எண்ண ஓட்டங்களை நன்கறிந்தவர்.
கடந்த இரண்டரை மாதங்களாக, ஓய்வின்றி தமிழகம் முழுவதும் பயணித்து கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பதற்கான கூட்டங்களில் பங்கேற்றார். ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாட, தேசியக் கொடி பேரணிகளை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளார்.
இந்த உற்சாகமான, மகிழ்வான மனநிலையில் அமித்ஷா மதுரை வருவதை விட பாஜக தொண்டர்களுக்கு மகிழ்வான செய்தி இருக்க முடியாது. மதுரையில் பேசப்போகும் அமித்ஷா, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தெளிவான பாதையை காட்ட இருக்கிறார்.
அதுபோல தேசியத்திற்கும், தெய்வீகத்திற்கும் எதிரான, பிரிவானவாத நோக்கம் கொண்ட திமுக கூட்டணிக்கு சம்மட்டி அடி கொடுக்கும் வகையில் அமித்ஷாவின் வியூகம் இருக்கப் போகிறது. திமுக கூட்டணி கட்சியினரின் தூக்கத்தை கெடுக்கப் போகிறது. அமித்ஷாவின் மதுரை வருகை, தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, மதுரைக்கு வரும் அமித்ஷாவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
காய் நகர்த்தும் குருமூர்த்தி:
அமித்ஷாவின் மதுரை வருகைக்கு முன்பு கூட்டணியில் நிலவி வரும் குழப்பத்தை தீர்க்கும் வகையில் தைலாபுரத்தில் உள்ள பாமக தலைவர் ராமதாஸின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்துள்ளார் ஆடிட்டர் குருமூர்த்தி.
ராமதாஸ், அவரது மகன் அன்புமணிக்கு இடையே பிரச்னை நிலவி வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அன்புமணிக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த ராமதாஸ், திமுக கூட்டணிக்கு செல்ல விரும்புவதாக தகவல்கள் வெளியான நிலையில், ஆடிட்டர் குருமூர்த்தி அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.





















