விமலின் 'பரமசிவன் ஃபாத்திமாவால் பஞ்சாயத்து.. 'சங்கி' வசனத்தால் பரபரப்பு! இ்ந்து கிறிஸ்தவ காதலால் மோதல்!
விமல் நடிப்பில் வெளியாகியுள்ள பரமசிவன் - பாத்திமா படத்தின் கதைக்களமும், வசனங்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் விமல். இவரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் பரமசிவன் ஃபாத்திமா. இந்து - கிறிஸ்து உறவு, இந்து - கிறிஸ்து காதல், மதப்பரப்புரை, மதக்கலவரம் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து இந்த படத்தில் பேசப்பட்டுள்ளது.
சங்கி:
இந்த படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் படத்தின் காட்சிகள் யூ டியூப்பில் வெளியாகியுள்ளது. அதில் கிறிஸ்தவ பாதிரியார் மற்றும் வெளிநாடு வாழ் கிறிஸ்தவ அமைப்பினர் கிராமத்தின் உள்ளே சென்று மதபரப்புரையில் ஈடுபடுவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சியில் திருவள்ளுவர் கிறிஸ்தவர், நம்ம ஐடி விங்கில் சொல்லி இவனை சங்கினு போடுங்க என்ற வசனங்கள் எல்லாம் இடம்பிடித்துள்ளது.
இந்து - கிறிஸ்தவ மோதலும், காதலும்:
படம் நகைச்சுவை மற்றும் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டிருந்தாலும் படத்தில் இடம்பிடித்துள்ள வசனங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தில் இடம்பிடித்துள்ள வசனங்களை வைத்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
இந்த படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணனே தயாரித்துள்ளார். தீபன் சக்கரவர்த்தி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக சாயா தேவி நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், கூல் சுரேஷ் மற்றும் சிலர் நடித்துள்ளனர்.
பெரும் சர்ச்சை:
தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். மீதான விமர்சனங்களுக்கு சிலர் சங்கி என்ற வார்த்தையை பயன்படுத்தி விமர்சித்து வருகின்றனர். அதேசமயம் மத பரப்புரை, மத மாற்றம் போன்ற விவகாரங்களும் பெரும் விவாதத்தையும், சர்ச்சையையும் எப்போதும் ஏற்படுத்தும் நிலையில் இந்த படத்தில் இந்த விவகாரங்கள் குறித்து பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கோலிவுட்டில் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு காலத்தில் சிவகார்த்திகேயனை விட பிரபலமான கதாநாயகனாக உலா வந்த விமல் தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்தார். பின்னர், விலங்கு வெப்சீரிஸிற்கு பிறகு கதைத்தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார். விலங்கு வெப்சீரிஸிற்கு பிறகு தெய்வமச்சான், குலசாமி ஆகிய படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தந்தது. ஹாட்ஸ்டாரில் வெளியான ஓம் காளி ஜெய் காளி ஆகிய படங்களும் அவருக்கு வரவேற்பை ஏற்படுத்தி தந்தது. இந்த நிலையில், இந்த படம் வெளியான இன்றே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.





















