Russia's Drone Attack: இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
ட்ரம்ப்பிடம் கூறியதுபோல், உக்ரைனுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்துவிட்டார் ரஷ்ய அதிபர் புதின். உக்ரைன் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 5 பேர் பலியான நிலையில், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் கூறியதுபோல், உக்ரைனுக்கு பதிலடியை கொடுக்க ஆரம்பித்துவிட்டார் ரஷ்ய அதிபர் புதின். ஏற்கனவே உக்ரைன் ரஷ்யாவிற்குள் ஊடுருவி ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், ட்ரோனுக்கு பதில் ட்ரோனை வைத்தே ரஷ்யாவும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
ரஷ்யாவின் பதிலடி ட்ரோன் தாக்குதல்
ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, உன்ரைன் மீது ரஷ்யா ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் ப்ரிலுகி நகரின் மீது நடத்தப்பட்ட ரஷ்ய ட்ரோன் தாக்குதலில், 1 வயது குழந்தை உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் ட்ரோன்கள் ப்ரிலுகி நகரின் குடியிருப்புப் பகுதிகளை இன்று அதிகாலை தாக்கியதாகவும், அதில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் உன்ரைன் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ப்ரிலுகி நகரின் மீதான தாக்குதல் நடந்து சில மணி நேரங்களில் கார்கிவ்வின் கிழக்குப் பகுதியில் உள்ள ஸ்லேபிட்ஸ்கி நகரிலும் ரஷ்யாவின் ட்ரோன்கள் தாக்கியுள்ளன. அதில் குழந்தைகள் உட்பட சுமார் 17 பேர் காயமடைந்ததாக பிராந்திய ஆளுநர் ஓலே சைனிஹுபோவ் தெரிவித்துள்ளார்.
ட்ரேன்கள் 2 அடுக்குமாடிக் குடியிருப்புகளை தாக்கியதாகவும், அந்த தாக்குதலின்போது சில வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் கூறியதுபோலவே, ரஷ்ய அதிபர் புதின் தனது தரப்பு தாக்குதலை தொடங்கியுள்ளார். அதிலும், ட்ரோனுக்கு பதிலடி ட்ரோன் மூலமே கொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் புதின் கூறியது என்ன.?
முன்னதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினிடம் தொலைபேசி வாயிலாக, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசியதாக தெரிவித்திருந்தார். அந்த உரையாடலின் போது, ரஷ்ய விமானப்படை தளங்கள் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல் குறித்தும், ரஷ்யா மற்றும் உக்ரைன் என இரு தரப்பினரும் நடத்திவரும் தாக்குதல்கள் குறித்தும் பேசியதாகவும் ட்ரம்ப் கூறியிருந்தார்.
மேலும், புதின் தன்னிடம் நன்றாகத் தான் பேசியதாகவும், ஆனால் உடனடியாக அமைதி ஏற்பட அது உதவாது என்றும் கூறிய ட்ரம்ப், உக்ரைனின் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்று ரஷ்ய அதிபர் உறுதிபட தெரிவித்ததாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான், தற்போது உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. புதின் கூறியபடி பதிலடி தொடங்கியுள்ளதால், இன்னும் எங்கெங்கு, எப்போது தாக்குதல் நடைபெறுமோ என உக்ரைன் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த திடீர் தாக்குதல்களை உக்ரைன் எப்படி சமாளிக்கப் போகிறது என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
ஒரு பக்கம் அமைதிக்கா பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்தாததால், இந்த போர் மேலும் தீவிரமடையுமே தவிர, அமைதி ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவில்லை.





















