எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. "ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு"
ஏழைகள் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கருணையுடன் கூடிய மத்திய அரசு, கடந்த பத்தாண்டுகளில், வறுமையின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

கடந்த 11 ஆண்டுக்கால ஆட்சியில் நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்துடன் ஏழைகள் நலனுக்கான திட்டத்தை செயல்படுத்துவதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
"கருணையுள்ள அரசு"
அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருவதால் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், பிரதமரின் சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம், ஜன் தன் திட்டம், ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பிரதமர் கூறினார்.
இவை வீட்டுவசதி, சுத்தமான சமையல் எரிவாயு, வங்கி மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தியுள்ளன. மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களின் பலன்களை வெளிப்படையாகவும் திறமையாகவும் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் நேரடி பணப் பரிமாற்றம், மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி"
கிராமப்புறங்களின் மேம்பாட்டிற்காக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், “ஏழைகள் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கருணையுடன் கூடிய மத்தியஅரசு.
கடந்த பத்தாண்டுகளில், அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு மேம்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்தப்படுவதன் மூலம் வறுமையின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி:
மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றி அமைத்துள்ளன. பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், பிரதமரின் சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம், ஜன் தன் திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் வீட்டுவசதி, தூய்மையான சமையல் எரிவாயு, வங்கி சேவைகள், சுகாதாரப் பராமரிப்புக்கான வாய்ப்புகளை மேம்படுத்தியுள்ளன.
நலத்திட்ட உதவிகள் நேரடியாக மக்களை சென்றடையும் வகையில், டிஜிட்டல் பரிமாற்ற நடவடிக்கைகள், கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதுடன் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதையும் உறுதி செய்துள்ளது.
இதன் காரணமாகவே 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையின் பிடியிலிருந்து மீண்டுள்ளனர். ஒவ்வொரு குடிமகனும் கண்ணியத்துடன் வாழ்வதற்கும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.





















