Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chinnaswamy stampede: பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில், ஆர்சிபி நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Chinnaswamy stampede: பெங்களூரு அணி நிர்வாகத்தின் மார்கெட்டிங் ஹெட் ஆன, நிகில் சோசலே கைது செய்யப்பட்டுள்ளார்.
4 பேர் கைது - பெங்களூரு கூட்ட நெரிசல்:
ராயல் சேலஞ்சஞர் பெங்களூரு அணி, 18 ஆண்டுகால காத்திருப்பிற்குப் பிறகு கோப்பையை வென்றதை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் சின்னசாமி மைதான வளாகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்த நிலையில் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ள தகவலின்படி, ஆர்சிபி அணி நிர்வாகத்தின் மார்கெட்டிங் ஹெட்டான நிகில் சோசலே என்பவர்ம் கைதாகியுள்ளார். மும்பைக்கு செல்வதற்காக கெம்பகவுடா விமான நிலையத்தில் இருந்தபோது, காலை 6.30 மணியளவில் பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான மற்றவர்கள் யார்?
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்கொண்ட ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியான DNA எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடடைச் சேர்ந்த சுனில் மேத்யூ, கிரன் மற்றும் சுமந்த் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கு சமமானதல்லாத குற்றவியல் கொலை உட்பட, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஆர்சிபி நிர்வாகிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகளை கைது செய்ய முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தீவிர விசாரணை:
மத்திய குற்றவியல் போலீசார் சார்பில் நாள்ளிரவில் நடந்த அதிரடி வேட்டையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விரைவிலேயே குற்றவியல் விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த செயலாளர் சங்கர் மற்றும் பொருளாளர் ஜெயராம் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணியை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர். அவர்களில் வீடுகளில் நடந்த சோதனையில் இருவரும் சிக்கவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
கொண்டாட்டத்தில் களேபரம்:
கடந்த புதன்கிழமை அன்று போதிய திட்டமிடல் இன்றி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்க லட்சக்கணக்கில் மக்கள் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு வெடிக்க, காவல்துறை தடியடியில் ஈடுபட்டனர். இதனால் மக்கள் முண்டியடித்ததில் உடல் நசுங்கி மற்றும் மூச்சு திணறி 11 பேர் உயிரிழந்தனர். அந்த பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு காவல் ஆணையர் உட்பட பல உயரதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து முதலமைச்சர் உத்தரவிட்டார். கூட்ட நெரிசல் தொடர்பாக நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வெடிக்கும் அரசியல்:
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்காததற்கு பொறுப்பேற்று, முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் சிவகுமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், இந்த விவகாரத்தில் பாஜக கீழ்தரமான அரசியல் செய்வதாக முதலமைச்சர் சாடியுள்ளார். இதனால், பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம் அரசியல் பிரச்னையாக வெடித்துள்ளது. இதனால், கைது நடவடிக்கை மேலும் நீளும் என்றும், இதில் வீரர்களும் அடங்குவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.





















