பாமகவின் குழப்பத்திற்கு காரணம்.. யார் அந்த வாத்தியார் ?.. போட்டு உடைத்த அன்புமணி
பாமகவின் நடைபெறும் உட்கட்சி பிரச்சனைக்கு பின்னணியில், வாத்தியார் ஒருவர் இருப்பதாக அன்புமணி ராமதாஸ் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாமகவில் அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே நிலவும் பிரச்சனைக்கு காரணம் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் மற்றும் வாத்தியார் ஒருவர் காரணமென, அன்புமணி ராமதாஸ் நிர்வாகிகள் மத்தியில் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
பாமகவில் உட்கட்சி பிரச்சனை
பாட்டாளி மக்கள் கட்சியில் அக்கட்சியின் நிறுவனருமான ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கடி மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்ட மாவட்ட செயலாளர்கள், தலைவர்களை ராமதாஸ் ஒரு புறம் நீக்கவும் மறுபுறம் அன்புமணி, நீக்கப்படுபவர்கள் அதே பொறுப்பில் தொடர்வார்கள் என அறிவித்து வருகிறார். இந்நிலையில் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாசை சமாதானம் செய்ய, நேரடியாக தைலாபுரம் தோட்டத்திற்கு இன்று அன்புமணி ராமதாஸ் சென்று இருந்தார். இந்த சந்திப்பின் பின்னணியில் சமாதானம் ஏற்பட்டதா இல்லையா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
அன்புமணி வீடியோ வைரல்
பாமக நிர்வாகிகளின் பொறுப்புகள் மாற்றம் செய்யப்படுவதாக ராமதாஸ் அறிவித்தாலும், அன்புமணி தனது ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனைகளை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு சென்னை பனையூரில் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அன்புமணி ராமதாஸ் நிர்வாகிகள் மத்தியில் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், பாமகவினரிடையே நிறைய குழுக்கள் உள்ளது. இதற்கு எல்லாம் காரணம் தலைமை நிலைய செயலாளராக உள்ள அன்பழகன் தான் காரணம் கட்சியில் 15 வருடமாக இல்லாமல் ஓடிவிட்டார். மீண்டும் கட்சி வந்த அவர் "மருத்துவர் ராமதாசின் காலை பிடித்து, பொறுப்புகளை வாங்கி கொண்டு" மாவட்ட செயலாளர்கள் பொறுப்பு வழங்க 5 லட்ச ரூபாய் வாங்கினார். படிப்படியாக குறைந்து 1 லட்ச ரூபாய்க்கு என விற்று கொண்டிருக்கிறார். ஆனால் அதை வாங்குவதற்கு தற்போது, ஆட்கள் இல்லை என தெரிவித்தார்.
மேலும் அன்பழகன் கட்சியின் துரோகி, சமுதாயத்தின் தூரோகியாக இருந்து கொண்டு கட்சியையும், சமுதாயத்தினை விற்று கொண்டிருப்பதாகவும் அவருடன் மற்றொருவர் இருக்கிறார், எல்லாத்தையும் பொறுத்து கொண்டு அமைதியாக தான் இருப்பதாகவும் என் மனதில் நிறைய உள்ளது. நிர்வாகிகள் தைரியமாக இருங்கள். மேலும் இதற்குப் பின்னால் வாத்தியார் ஒருவர் இருப்பதாகவும், அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு முன் வைத்தார். அதுபோக இதற்குப் பின்னால் வாத்தியார் ஒருவர் இருக்கிறார் என சூசகமாக தெரிவித்தார்.
யார் அந்த வாத்தியார் ?
அன்புமணி ராமதாஸ் வாத்தியார் என குறிப்பிட்டதை தொடர்ந்து யார் அந்த நபர் என விசாரிக்க தொடங்கினோம். இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு விசாரித்த போது: தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸுக்கு, அறிக்கைகளை தயார் செய்து கொடுக்கும் நபராகத்தான் இருக்கும் என தெரிவித்தனர். அவரது பெயர் பரந்தாமன் எனவும், செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியை சார்ந்தவர் எனவும் தெரிவித்தனர்.
சமூகம் முன்னேற்ற சங்கத்தை சார்ந்தவர் எனவும், பாமக நிர்வாகிகள் தெரிவித்தனர். அன்பழகன் மற்றும் பரந்தாமன் இருவரும் சேர்ந்து கொண்டு, மூன்றாவது நபர் வழிகாட்டுதலுடன் செயல்படுவதாகவும், பாமகவினர் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இவர் சமூக முன்னேற்ற சங்கம் மற்றும் அந்த சங்கத்தின் கிளை அமைப்பான ஆசிரியர் சங்கம் ஒன்றிலும் பணியாற்றி வந்ததாகவும் தெரிவிக்கின்றனர். பெரியவரின் முதுமையை பயன்படுத்திக்கொண்டு, இவர்கள் செய்யும் செயலாலே கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாகும் தெரிவித்தனர்.
இதுகுறித்து பரந்தாமனிடம் விளக்கம் கேட்க தொடர்பு கொண்ட போது: தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது





















