Valentines Day : 50 வயது ஆன போதும் அன்பு மலரும்... சால்ட் அண்ட் பெப்பர் காலத்திலும் காதல் மலர்ந்த தமிழ் படங்கள்!
Valentines Day 2024: இலையுதிர் காலத்திலும் காதல் மலர்ந்து பூ பூக்கும் என்பதற்கு உதாரணமாக தமிழ் சினிமாவில் வெளியான சில படங்கள் :
காதலுக்கு கண்ணில்லை என்பது வழக்கமான ஃபார்முலா என்றாலும் காதலுக்கு வயதுமில்லை என்பது தான் சமீப காலமாக சினிமாவில் ட்ரெண்டாகி வரும் ஒரு ஃபார்முலா. திரைப்பட தயாரிப்பாளர்கள் வயதான காலத்தில் மலரும் அழகான காதலை படமாக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளனர். அப்படி இலையுதிர் காலத்திலும் காதல் மலர்ந்து பூ பூக்கும் என்பதற்கு உதாரணமாக தமிழ் சினிமாவில் வெளியான சில படங்கள் குறித்த ஒரு சிறு தொகுப்பு :
ப. பாண்டி : ராஜ்கிரண் - ரேவதி
நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான முதல் படம் 'ப. பாண்டி'. ரிட்டையரான சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ராஜ்கிரணுக்கு நிறைவேறாமல் போன தன்னுடைய பால்ய காதலி ரேவதியை தேடி கண்டுபிடித்து அதை புதுப்பித்த இப்படம் கொள்ளை அழகு. பெற்றோர்களை சந்தோஷமாக வாழ வைக்க வேண்டும், அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என புரிய வைத்த திரைப்படம்.
ஓ காதல் கண்மணி - பிரகாஷ் ராஜ்-லீலா சாம்சன்
இளம் ஜோடிகளுக்கு இடையேயான காதலை லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் மூலம் காட்டினாலும் பிரகாஷ்ராஜ் - லீலா சாம்சன் இடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும் எளிமையான காதலை வெளிப்படுத்தியது. அவர்களின் புரிதலையும் காதலையும் பார்த்து இளம் ஜோடியினருக்கு திருமணம் என்பது அன்பின் இயல்பான முன்னேற்றம் என்பதை உணர்த்திய படம்.
பலே வெள்ளைய தேவா : சங்கிலி முருகன் - கோவை சரளா
குழந்தை இல்லாத தம்பதிகளான சங்கிலி முருகன் - கோவை சரளாவை இந்த சமூகம் வேற்றுமையுடன் பார்க்கிறது. அவை அனைத்தையும் மறைத்து செல்பி மோகத்தில் அல்ட்ரா மார்டன் பாட்டியாக வலம் வரும் கோவை சரளா மற்றும் அவருக்கு சற்றும் சளைக்காத கணவனாக சங்கிலி முருகனும் சக்கை போடு போட்டிருந்தனர்.
பண்ணையாரும் பத்மினியும் : ஜெயபிரகாஷ் - துளசி
ஊரின் மதிப்புமிக்க பண்ணையார் அவரது அம்பாசிடர் கார் பத்மினியை பற்றிய கதை என்றாலும் அதில் பண்ணையாருக்கும் அவரது மனைவி துளசிக்கும் இடையே இருக்கும் ஊடல் கலந்த காதலையும் அழகாக சித்தரித்த ஒரு திரைப்படம். இப்படத்தில் இடம்பெற்ற உனக்காக பிறந்தேனே எனதழகா... பிரியாம இருப்பேனே பகல் இரவா... என்ற பாடல் மூலம் அவர்களின் அன்பை வெளிப்படுத்தியது. அப்பாடல் இன்று வரை ரசிக்கப்படும் ரொமான்டிக் பாடல்.
கபாலி : ரஜினிகாந்த் - ராதிகா ஆப்தே
25 ஆண்டு சிறை வாழ்க்கைக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தை தேடி செல்லும் போது இறந்ததாக நினைத்த மனைவியை சந்திக்கும் அந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அவர்களின் முதிர்ச்சியில் வந்த காதலை மாயநதி பாடல் வசீகரமாக வெளிப்படுத்தியது.
தண்டட்டி : பசுபதி - ரோகினி
ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளும் காதல் ஜோடியை பிரித்து காதலை அடித்து கிணற்றில் போடும் அண்ணன்கள். வயதான காலத்தில் தங்க பொண்ணுவின் தண்டட்டிக்காக அடித்து கொள்ளும் குடும்பம். கதையின் பிற்பகுதியில் தொலைத்த காதலன் தண்டட்டிக்கு காவலாக வந்த போலீசாகரர் என்பது புலப்படுகிறது. தங்கப்பொண்ணுவாக ரோகினி ஒரு சில காட்சிகள் வந்தாலும் நிறைவான நடிப்பு. ஒட்டுமொத்த படத்தையும் தன் தோள்மீது சுமந்த பசுபதியின் மற்றுமொரு சிறந்த படைப்பு.