அகரம் அறக்கட்டளைக்கு பாக்கெட் மணியை கொடுத்து உதவும் சூர்யா மகன் மகள்
அகரம் அறக்கட்டளைக்கும் சூர்யா ஜோதிகாவின் மகள் தியா மற்றும் மகன் தேவ் தங்கள் பாக்கெட் மணிகளை கொடுத்து உதவி வருவதாக நடிகர் கார்த்தி கூறியுள்ளார்

15 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்த அகரம் விதை திட்டம்
ரெட்ரோ படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இந்த தீபாவளிக்கு இப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தபடியாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார். இதனிடையில் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் விதை திட்டம் 15 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. இதனை தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக தனது குடும்பத்துடன் மற்றும் அகரம் மாணவர்களுடன் கொண்டாடினார் சூர்யா. பல திரை பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள்
இந்த நிகழ்வில் பேசிய சூர்யா " அகரம் அறக்கட்டளையால் பயன்பெற்ற மாணவர்கள் தாங்கள் பெற்ற உதவியை விட திருப்பி மற்ற மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். கொடுக்க கொடுக்க குறையாதது கல்வி போல கொடுக்க கொடுக்க குறையாதது அன்பு என்பதை இங்கே இருக்கும் நன்கொடையாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள்" என்றார்
பாக்கெட் மணியை கொடுத்து உதவும் தியா தேவ்
இந்த நிகழ்வில் சூர்யாவின் தம்பி கார்த்தி பேசுகையில் சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துகொண்டார். அவர் பேசுகையில் " பல நேரங்களில் மாணவர்களின் கல்விக்கு பணமில்லாமல் சூர்யா அண்ணா தடுமாறி நிற்பார். அப்போது எல்லாம் 'பணத்தை வைத்தா இதை ஆரம்பித்தோம் அன்பை வைத்துதான். பணம் வரும்' என ஜோதிகா தான் அவரை ஊக்கப்படுத்துவார். ரயில்வே ஸ்டேஷன் போனால் அங்கிருக்கும் போர்டருக்கு அப்பா 100 ரூபாய் எடுத்து கொடுப்பார். 100 ரூபாய் அதிகம் என்று நான் சொல்வேன். இந்த பணத்தை வைத்து அவன் என்ன சொத்தா சேர்க்கப் போகிறான். அவன் குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுப்பான் என அப்பா என்னிடம் சொல்வார். இன்று சூர்யா ஜோதிகாவின் மகள் தியா மற்றும் மகன் தேவ் இருவரும் தங்கள் பாக்கெட் மணியை அகரம் மாதம் 300 ரூபாய் திட்டத்திற்கு கொடுத்து வருகிறார்கள். இன்னொருவருக்கு கொடுத்து உதவுவது ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது' என கார்த்தி பேசினார்"
சூர்யா 46
சிதாரா என்டர்டெயினெமெண்ட் தயாரிப்பில் உருவாகும் சூர்யா 46 படத்தை வாத்தி , லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்குகிறார். மமிதா பைஜூ இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். சாய் அப்யங்கர் படத்திற்கு இசையமைக்கிறார்.





















