Siraj: 183 ஓவர்கள்... சிராஜ் எனும் சிங்கம்.. அசராத வீரனாய் அசத்திய கோலியின் தம்பி..!
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை 2-2 என்று கணக்கில் இந்திய அணி சமன் செய்ததற்கு முகமது சிராஜ் முக்கிய காரணம் ஆவார்.

IND vs ENG: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே கடைசி நாளில் தேவைப்பட்ட நிலையில், இந்திய பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா அபாரமாக பந்துவீசி எஞ்சிய 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி பெற வைத்தனர்.
இங்கிலாந்துக்கு பாடம் எடுத்த இந்தியா:
இந்த தொடர் தொடங்கும் முன்பு சுப்மன்கில் கேப்டன்சி, ரோகித் சர்மா - விராட் கோலி இல்லாதது போன்ற பல விமர்சனங்களையும், பின்னடைவுகளையும் இந்தியா சந்தித்தது. பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே ஆடியது, ரிஷப்பண்ட் இல்லாதது என்று பல சவால்களையும் இந்தியா எதிர்கொண்டது. ஆனாலும், இந்த தொடரை எளிதாக வெல்லலாம் என்று தப்புக் கணக்கு போட்ட இங்கிலாந்து அணிக்கு இந்தியா 2-2 என்று தொடரை சமன் செய்து பாடம் புகட்டியது.

இந்திய அணியின் இந்த அபாரமான வெற்றிக்கு முக்கிய காரணம் முகமது சிராஜ். ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ரிஷப்பண்ட், சுப்மன்கில், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் என பேட்டிங் பட்டாளம் தனது பணியை சிறப்பாக செய்தாலும் இந்த தொடர் முழுவதும் மைதானம் பந்துவீச்சிற்கு ஒத்துழைக்க மறுத்தது.
5 டெஸ்ட் போட்டிகள்:
ஆனாலும், 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடினார் முகமது சிராஜ். அவர் இந்த தொடர் முழுவதும் 183 ஓவர்கள் பந்துவீசியுள்ளார். 23 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். பும்ரா 3 விக்கெட்டுகள் மட்டுமே விளையாடிய நிலையில், சிராஜ் 5 டெஸ்ட் போட்டிகளும் விளையாடினார். இந்த தொடரிலே 5 டெஸ்ட் போட்டிகளும் ஆடிய ஒரே வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மட்டுமே ஆவார்.
பும்ரா இல்லாத நிலையில், வேகப்பந்துவீச்சுக்கு அணியை வழிநடத்தி இந்தியாவை வெற்றி பெற வைத்தார். எட்ஜ்பாஸ்டன் மண்ணில் இந்தியா வெற்றியே பெற்றதில்லை என்ற மோசமான வரலாற்றை மாற்றவும் சிராஜே துணை நின்றார். அந்த போட்டியில் ஒரு இன்னிங்சில் மட்டும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
சிராஜ் எனும் போராளி:
லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த த்ரில் போட்டியிலும் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். பும்ராவிற்கு அடுத்தபடியாக இந்திய அணியின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளராக முகமது சிராஜ் உள்ளார். 31 வயதான சிராஜ் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து போட்டிகளிலும் தனது சிறந்த பங்களிப்பை இந்திய அணிக்கு அளித்து வருகிறார்.

மிகவும் அர்ப்பணிப்பு உள்ள வீரராக இந்திய அணிக்காக தனது அனைத்தையும் அளிக்கும் ஒருவராகவே முகமது சிராஜ் உள்ளார். அவரது அர்ப்பணிப்பை கண்டு வியந்த இங்கிலாந்து ஜாம்பவான் வீரர் ஜோ ரூட், முகமது சிராஜ் ஒரு போராளி என்று பாராட்டியுள்ளார். முகமது சிராஜ் இந்திய அணியில் வளர்ச்சி அடைந்ததற்கு விராட் கோலியும் ஒருவர் ஆவார். கோலியின் கேப்டன்சியில்தான் அணிக்குள் சிராஜ் வந்தார். கோலியைப் போலவே களத்தில் ஆக்ரோஷமாக விளையாடக்கூடியவர் முகமது சிராஜ். இதனால், இவரை சிலர் விராட் கோலியின் தம்பி என்றும் குறிப்பிடுவார்கள்.
31 வயதான முகமது சிராஜ் இதுவரை 41 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 123 விக்கெட்டுகளையும், 44 ஒருநாள் போட்டிகளில் ஆடி 71 விக்கெட்டுகளையும், 16 டி20 போட்டிகளில் 14 விக்கெட்டுகளையும், 108 ஐபிஎல் போட்டிகளில் 109 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.




















