K V Anand: இயக்குநர் கே.வி.ஆனந்தின் நிறைவேறாத கனவு.. கபிலன் வைரமுத்து பகிர்ந்த தகவல்!
மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த், சிலம்பரசன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஜோடியில் ஒரு படம் இயக்கத் திட்டமிட்டிருந்ததாக பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
கே.வி.ஆனந்த்
‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்தவர் இயக்குநர் கே.வி.ஆனந்த். புகைப்படக் கலைஞர் மற்றும் ஒளிப்பதிவாளராக தனது பயணத்தைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் இயக்கிய முதல் படம் 100 நாட்கள் திரையரங்கில் ஓடியது. ஒரு இயக்குநராக கமர்ஷியல் சினிமாக்களில் எப்போது புதுமையை முயற்சிப்பவராக கே.வி ஆனந்த் இருந்திருக்கிறார். பத்திகையாளராக, ஒளிப்பதிவாளராக தான் தெரிந்துகொண்ட அனுபவங்களை தனது படங்களில் சிறப்பாகப் பயன்படுத்தினார்.
அயன், கோ, மாற்றான், அனேகன், காப்பான் என தன் படங்களில் ஒவ்வொரு முறையும் ஒரு புது கான்செப்ட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறார். விறுவிறுப்பான திரைக்கதை, புதுப்புது தொழில் நுட்பங்கள், தகவல்கள் என படத்தை சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார். வெற்றியடைந்தாலும் தோல்வியடைந்தாலும் கே.வி ஆனந்த் படம் என்றால் கண்டிப்பா ஏதாவது சுவாரஸ்யமாக இருக்கும் என்று அவரது படங்களை பார்க்கச் செல்லும் ரசிகர்களே அதிகம்.
கொரோனா நோய்த்தொற்று உச்சத்தில் இருந்தபோது கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார் கே.வி.ஆனந்த். அவரது மறைவு தமிழ் திரையுலகினருக்கு ரசிகர்களுக்கு இன்றுவரை ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பாக இருந்து வருகிறது. சமீபத்தில் அவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ரசிகர்கள் அவர்களை நினைவு கூர்ந்தார்கள். இறப்பதற்கு முன்பாக கே.வி.ஆனந்த் இயக்கவிருந்த படம் குறித்த தகவல்களை சமீபத்தில் பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து தெரிவித்திருந்தார்.
சிம்பு ஐஸ்வர்யா ராய் வைத்து படம்
#SilambarasanTR and #AishwaryaRai were in preliminary discussions for a film directed by K.V. Anand. But then due to covid and death of #KVAnand sir, the film was shelved . pic.twitter.com/quO83Kbk6u
— Let's X OTT GLOBAL (@LetsXOtt) June 27, 2024
நேர்காணல் ஒன்றில் சமீபத்தில் பேசிய கபிலன் வைரமுத்து கே.வி.ஆனந்த் இறப்பதற்கு முன்பாக நான்கு படங்களை இயக்கத் திட்டமிட்டிருந்ததாகவும், அதில் ஒரு படத்தில் சிம்பு மற்றும் ஐஸ்வர்யா ராயை இயக்கவிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் சிம்பு கேங்ஸ்டராக நடிக்க இருந்தார் என்று கபிலன் வைரமுத்து தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குள்ளாக அவர் உயிரிழந்துவிட்டார்.
அயன் படத்திற்கு பின் கே.வி.ஆனந்த் கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து படங்களை இயக்கவில்லை. அவரது படங்கள் பெரும்பாலும் அரசியல் த்ரில்லர் கலந்த படமாக இருந்திருக்கின்றன். சிம்பு மற்றும் ஐஸ்வர்யா ராயை வைத்து இந்தப் படத்தை அவர் இயக்கியிருந்தார் என்றால் நிச்சயமாக சிம்பு கரியரில் அது முக்கியமான படமாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.