ADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக கொண்டுவந்த நிலையில், இரண்டு நாட்களாக சட்டமன்ற சபாநாயகர் அறையில் அமர்ந்திருந்த செங்கோட்டையன் இன்று சபாநாயகர் அறைக்கு வருவதற்கு முன்பாகவே அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 10 பேர் சபாநாயகர் அறையில் அமர்ந்து செங்கோட்டையன் சபாநாயகரை பார்க்கவிடாமல் தடுத்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அத்திகடவு அவினாசி திட்டதிற்காக எடப்பாடி பழனிசாமியை பாராட்டி நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பங்கேற்பதை புறக்கணித்தார். அதேபோல், எஸ்பி வேலுமணி மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி வருவதற்கு முன்னரே வந்துவிட்டு சென்றுவிட்டார். இப்படி செங்கோட்டையன் தொடர்ந்து அதிமுக கூட்டும் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தையும் புறக்கணித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்து விட்டு சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பேசினார்.
அதேபோல், டாஸ்மாக்கில் நடந்த அமலாக்கதுறை சோதனை குறித்து கேள்வி எழுப்பி எடப்பாடி பழனிசாமி கூச்சலிட, அதிமுகவினர் அனைவரும் வெளிநடப்பு செய்த போது செங்கோட்டையன் மட்டும் அமைதியாகவே அமர்ந்திருந்தார். இதன் மூலம் அவர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாகவே எதிர்ப்பது தெரியவந்தது. இதனிடையே, சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் செங்கோட்டையனிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுவந்தனர்.
சபாநாயகர் அப்பாவு செங்கோட்டையனை பார்த்து சைகியிலேயே இந்த பக்கம் வந்துடுங்க என்று கூறியதாகவும் அதற்கு செங்கோட்டையனோ கையெடுத்து கும்பிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அதே நேரம் மறு நாள் தனியார் நிகழ்சியில் பங்கேற்ற செங்கோட்டையன், “நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று எல்லோரும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒன்றும்செய்யப் போவதில்லை. எந்தப் பாதை சரியாக இருக்கிறதோ, அதில் சென்று கொண்டிருக்கிறேன். என் லட்சியம் உயர்வானது, என் பாதை தெளிவானது. வெற்றி முடிவானது.பாரதியார் சொன்னதைப் போல, சில வேடிக்கை மனிதர்களைப் போல வீழ்ந்து விட மாட்டேன்” என்று எடப்பாடிக்கு எதிராக பேசியது பேசு பொருளானது.
இந்த நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் சபாநாயகர் அப்பாவுவிற்கு எதிராக சட்டப்பேரவையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்பி உதயகுமார் கொண்டுவண்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று விவாதத்திற்கு வந்தது. எங்கே கடந்த இரண்டு நாட்களும் சபாநாயகரை சந்தித்து பேசிய செங்கோட்டையன் இன்று சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்திற்கு வரும் சூழலில் அவரை சந்தித்தால் அது அதிமுகவிற்குள் கடும் சலசலப்பை ஏற்படுத்தும் என்றும் அதிமுக ஒன்றாக இல்லை என்று மீடியாக்களில் செய்திகள் இடம் பெற்று விடும் எனவும் அதை எப்படியாவது தடுக்கவேண்டும் என எடப்பாடி பழனிசாமி ஒரு ப்ளான் போட்டதாக தகவல் வெளியானது.
அதாவது செங்கோட்டையன் சபாநாயகர் அறைக்கு வருவதற்கு முன்னரே அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சபநாயகர் அறைக்கு சென்று செங்கோட்டையன் வராமல் பார்த்துக்கொள்ளும் படி கூறியிருக்கிறார். இதன்படி அதிமுக எம்.எல்.ஏக்கள் 10 பேர் சபாநாயகர் அறைக்கு சென்று அமர்ந்து செங்கோட்டையனை வரவிடாமல் தடுத்தது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.





















