Sengottaiyan: தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டேவா செங்கோட்டையன்? ஸ்கெட்ச் போடும் பாஜக- டெல்லி விசிட் பின்னணி!
எடப்பாடி பழனிசாமி இல்லாத ஒருங்கிணைந்த அதிமுக- பாஜக கூட்டணி அமைய வேண்டும் என்பதும் டெல்லியின் திட்டம் என்ற தகவலும் வெளியகியுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் ஈபிஎஸ், அமித் ஷாவை டெல்லியில் சந்தித்துவிட்டு திரும்பிய சூழலில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் டெல்லி சென்று திரும்பியது அரசியல் வட்டாரத்தில் சூட்டை கிளப்பிய நிலையில், அந்த சந்திப்பின் பரபரப்பு பின்னணி வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இவர்களுக்கு இடையிலான இந்த மோதல் போக்கை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பாஜக திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் சூழலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜகவை தமிழ்நாட்டில் வலுவான கட்சியாக மாற்றும் முயற்சியில் டெல்லி பாஜக ஈடுபட்டுவரும் சூழலில், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக இப்போது பாஜக உடனான கூட்டணியை உறுதி செய்யும் விதமாக அமைந்தது எடப்பாடியின் டெல்லி விசிட்.
ஒருங்கிணைந்த அதிமுக
பாஜகவே எடப்பாடி பழனிசாமி மட்டுமின்றி ஒருங்கிணைந்த அதிமுகவையே விரும்புவதாக சொல்லப்படுகிறது. அதாவது ஓபிஎஸ், சசிகலா மற்றும் தினகரனை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டால் அது அதிமுகவை இன்னும் வலிமையாக்கும் சட்டமன்ற தேர்தலிலும் அது நமக்கு வெற்றிக்கு உதவும் என்பது டெல்லி பாஜக சீனியர்களின் விருப்பமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால் எடப்பாடியோ கூட்டணியில் இணைய தயாராக இருந்தாலும் அவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று முரண்டுபிடிக்கிறார். மறுபுறம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடனும் அவருக்கு கடந்த சில வருடங்களாகவே மோதல் போக்குதான் நிலவிவருகிறது.
பாஜக தலைமைக்கு அதிருப்தி
எடப்பாடி பாஜகவுடன் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டாலும் இவையெல்லாம் பாஜக தலைமைக்கு அதிருப்தியை கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி பரபரப்பான அரசியல் சூழலில்தான் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென டெல்லி சென்றது பேசுபொருளாகியுள்ளது.
அதன்படி டெல்லியில் அவர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாஜக தலைவர் அண்ணாமலை , வானதி சீனிவாசன் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு இருக்கும் நிலையில் செங்கோட்டையன் டெல்லி விசிட் மிக முக்கியமானதாக பார்க்கப்படும் சூழலில் அதிமுகவின் ஷிண்டேவாக அவரை உருவாக்க பாஜக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகாராஷ்ட்ரா அரசியல் களத்தில் சிவசேனவை எப்படி இரண்டாக உடைத்து பாஜக ஆட்சியை பிடித்ததோ அதே பார்முலாவை அதிமுகவில் பாஜக எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் செங்கோட்டையன் மீது திடீரென எடப்பாடி பழனிசாமியால் உடனே நடவடிக்கை எடுக்க முடியாது. அப்படி ஒரு நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி எடுக்க வேண்டும் என்றால் செங்கோட்டையனுக்கு அவர் நெருக்கடி கொடுக்க வேண்டும்.
கட்சிக்குள் பிரச்சினை
அப்படி கட்சிக்குள் பிரச்சனை உண்டானால் அதிமுக பிளவுபடுவதாக தோற்றத்தை உருவாக்கி புதிய பொதுச்செயலாளராக செங்கோட்டையனை நியமிக்க வேண்டும் என்பது பாஜகவின் ப்ளானாக இருப்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி இல்லாத ஒருங்கிணைந்த அதிமுக- பாஜக கூட்டணி அமைய வேண்டும் என்பதும் டெல்லியின் திட்டம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.






















