TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: போராட்டத்துக்கு முன்பே அண்ணாமலை உள்ளிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு முன்பே அண்ணாமலை உள்ளிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என பாமக. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் மீதான ஊழல் புகார் குறித்து தமிழக அரசுக்கு எதிராக பாஜக சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற அண்ணாமலையை, சென்னையை அடுத்த அக்கரை பகுதியில் போலீஸார் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர்.
இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் X தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவதற்கு முன்பே பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஊழலுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டு அரசும் காவல்துறையும் அஞ்சுவது ஏன்? தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடுவதற்கு கூட அனுமதி இல்லையா? திமுகவினர் ஊழல் செய்யவில்லை என்றால் இத்தகைய அடக்குமுறைகளை கைவிட்டு, டாஸ்மாக் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தனது X எக்ஸ் தளத்தில், டாஸ்மாக் அலுவலக முற்றுகை போராட்டத்துக்கு புறப்பட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்துள்ளது தமிழக அரசின் காவல்துறை. டாஸ்மாக்கில் 1,000 கோடிக்கு மேலாகவே முறைகேடு நடந்திருக்கும், டாஸ்மாக் ஊழல் வழக்கில் முதல் குற்றவாளியாக முதல்வர் தான் இருக்க வேண்டும், செந்தில் பாலாஜியே 2வது குற்றவாளிதான், 3 முதல் தகவல் அறிக்கைகளை வைத்துதான் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் டாஸ்மாக்கில் 40% சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடைபெறுகிறது எனத் தெரிவித்த தலைவர் அண்ணாமலை, டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகை செய்யும் போராட்டம் இன்று பாஜக சார்பில் நடைபெறும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

