’’அதிமுக உட்கட்சி பூசல்; திசைதிருப்பவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்’’ போட்டுத் தாக்கிய முதல்வர் ஸ்டாலின்!
உட்கட்சிக் குழப்பத்தை திசை திருப்பவே இப்படி ஒரு தீர்மானமா? குறை சொல்லவே காரணம் இல்லாத சூழலால், இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது- முதல்வர் ஸ்டாலின்.

அதிமுக உட்கட்சி குழப்பத்தை திசைதிருப்பவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் யாருடைய தலையீடு இல்லாமல், பேரவையை நடத்தி வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.
அதிமுக உறுப்பினர்கள் பேச போதிய நேரம் அளிக்கப்படவில்லை எனவும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது குறுக்கீடு செய்வதாகவும் கூறி, அதிமுக சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. இந்தத் தீர்மானத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் பேரவையில் பேசி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:
’’யாருடைய தலையீடும் இன்றி சட்டப்பேரவை நடந்து வருகிறது. விருப்பு, வெறுப்பு இன்றி உரையாடலை நடத்தி வைப்பார். என் தலையீடோ, அமைச்சர் தலையீடோ இன்றி பேரவைத் தலைவர் பேரவையை நடத்தி வருகிறார். நடுநிலையோடு செயல்படுபவர் அப்பாவு. கனிவானவர். அதே நேரத்தில் கண்டிப்போடு செயல்படுபவர் அப்பாவு.
எதற்காக இப்படி ஒரு தீர்மானம்?
சுதந்திரக் காற்றை பேரவை சுவாசிக்கிறது. உட்கட்சிக் குழப்பத்தை திசை திருப்பவே இப்படி ஒரு தீர்மானமா? குறை சொல்லவே காரணம் இல்லாத சூழலால், இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி
பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது, இன்று(17.03.25) விவாதம் நடைபெறும் என்று, முன்னதாக, சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். அந்த வகையில், சட்டப்பேரவையில் இன்று, அந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த குரல் வாக்கெடுப்பில், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது. தொடர்ந்து டிவிஷன் முறையிலான வாக்கெடுப்பு நடைபெற்றது.
அப்போது சபாநாயகர் அப்பாவு பேரவையைவிட்டு வெளியேறினார். துணை சபாநாயகர் பிச்சாண்டி பேரவையை வழிநடத்தினார். டிவிஷன் முறையிலான வாக்கெடுப்பிலும் தீர்மானம் தோல்வியைத் தழுவியது.
தீர்மானத்தை ஆதரித்த செங்கோட்டையன்
இதற்கிடையே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கொண்டு வந்த தீர்மானத்தை, ஈபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் மூத்த உறுப்பினர் செங்கோட்டையனும் ஆதரித்தார். தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வமும் தீர்மானத்தை ஆதரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

