"இப்படி ஒரு தவறான காரியத்தை.." பாரதிராஜாவை பங்கமாய் கலாய்த்த கருணாநிதி!
நடிகர் நெப்போலியன் திருமணத்தின்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பாரதிராஜாவை கேலி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உலா வந்தவர் நெப்போலியன். கதாநாயகனாக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் நெப்போலியனின் திருமணத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.
பாரதிராஜாவை கலாய்த்த கருணாநிதி:
அந்த நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி, "இயக்குனர் பாரதிராஜா பேசும்போது மணமகன் நெப்போலியனை வாழ்த்தும்போது நெப்போலியனும் சுஜாதாவும் என்று குறிப்பிட்டார். இப்படி எல்லாம் ஒரு தவறான காரியத்தை அதுவும் ஒரு இயக்குனர் கதாநாயகனுடைய பெயரே தெரியாமல் பேசியது எனக்கு விந்தையாக இருக்கிறது.
இது என்னுடைய குடும்பத் திருமணம் என்றெல்லாம் உரிமை கொண்டாடினார். அவருடைய குடும்பத்திற்கு மருமகளாக வரக்கூடிய பெண்ணின் பெயர்கூட கல்யாணச் சந்தடியில் மறந்துவிட்டார் என்பதுதான் வேடிக்கை. நான் உரிமையின் காரணமாக அதைத் திருத்தி தம்பி நெப்போலியனும், செல்வி ஜெயசுதாவும் வாழ்வாங்கு வாழ வேண்டும், வளமெல்லாம் பெற்று வாழ வேண்டும்" என்று கருணாநிதி பேசினார். மறைந்த முதலமைச்சரான கருணாநிதியின் தலைமையில் தமிழ் திரையுலகின் பல பிரபலங்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. நெப்போலியன் திமுக சார்பில் எம்.எல்.ஏ.வாகவும், எம்.பி.யாகவும் பொறுப்பு வகித்தவர். அமைச்சர் நேருவின் நெருங்கிய உறவினர் நெப்போலியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நெப்போலியன்:
மறைந்த கருணாநிதி அரசியல்வாதியாக மட்டுமின்றி எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், கவிஞர் என பன்முகத் திறன் கொண்டவர். மேலும், சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். திரைத்துறையின் ஜாம்பவான்களான ரஜினி, கமல், வாலி, வைரமுத்து, இளையராஜா, பாரதிராஜா என அனைவருடனும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார்.
நெப்போலியனின் இயற்பெயர் குமரேசன் துரைசாமி ஆகும். இவரை புது நெல்லு புது நாத்து திரைப்படம் மூலம் முதன்முதலில் நடிகராக அறிமுகப்படுத்தியது இயக்குனர் பாரதிராஜா ஆவார். இதன்பின்பு, ரஜினிகாந்த், விஜயகாந்த், கமல்ஹாசன், பிரசாந்த், விஜய், சரத்குமார், சத்யராஜ், ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். ஹிப் ஹாப் ஆதி, பாபி சிம்ஹா, கார்த்தி, சிவகார்த்திகேயன், சசிகுமார் ஆகியோருடனும் நடித்துள்ளார். இவர் கதாநாயகனாக நடித்த எட்டுப்பட்டி ராசா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

