"வெறும் ரூ 800" எக்ஸாம் பீஸ் கட்ட முடல.. மாணவியை அசிங்கப்படுத்திய ஆசிரியர்.. கடைசியில் சோகம்
உபியில் தேர்வு கட்டணம் செலுத்தாத காரணத்தால் முதல்வர், ஆசிரியர்கள் சேர்ந்து 9ஆவது வகுப்பு மாணவியை அவமானப்படுத்தியுள்ளனர். தேர்வுக்கு அனுமதிக்கவில்லை. இதனால், அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் 800 ரூபாய் தேர்வு கட்டணம் கட்டாத காரணத்தால் முதல்வர், ஆசிரியர்கள் சேர்ந்து 9ஆவது வகுப்பு மாணவியை அவமானப்படுத்தியுள்ளனர். மற்றவர்கள் முன்னிலையில் அசிங்கப்படுத்தியது மட்டும் அல்லாமல் மாணவியை தேர்வுக்கு அனுமதிக்கவில்லை. இதனால், அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவி:
உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் பூனம் தேவி. இவரின் மகள் பிரஜாபதி. கமலா சரண் யாதவ் இன்டர் காலேஜில் 9ஆவது வகுப்பு படித்து வந்துள்ளார். 800 ரூபாய் தேர்வு கட்டணம் செலுத்தாத காரணத்தால் இவரை தேர்வெழுத அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
மற்ற மாணவர்கள் முன்னிலையில் பிரஜாபதியை அசிங்கப்படுத்தியுள்ளனர். இதனால், மனம் உடைந்த அவர், தனது வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பிரஜாபதியின் தாயார் பூனம் தேவி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடைசியில் நடந்த துயரம்:
அந்த புகாரில், "நேற்று தேர்வெழுதச் சென்ற மகளை கல்லூரி மேலாளர் சந்தோஷ் குமார் யாதவ், முதல்வர் ராஜ்குமார் யாதவ், ஊழியர் தீபக் சரோஜ், பியூன் தனிராம், இன்னும் அடையாளம் தெரியாத ஆசிரியர் ஆகியோர் அவமானப்படுத்தினர். மாணவியை பரீட்சைக்கு உட்கார அனுமதிக்கவில்லை. வீட்டிற்கு திரும்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்.
அவமானத்தால் மனமுடைந்த பிரஜாபதி வீடு திரும்பிய நிலையில் அறையில் தூக்குப்போட்டு இறந்தார். கல்லூரி ஊழியர்கள் தன் மகளின் எதிர்காலத்தை பாழாக்குவதாக மிரட்டி, அவரை தற்கொலைக்கு தூண்டியுள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (கிழக்கு) துர்கேஷ் குமார் சிங் கூறுகையில், "இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.
(எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வு அல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019)

