Kangana Ranaut: 'மனதில் பட்டதை பேசியதற்காக ரூபாய் 40 கோடி வரை நஷ்டம்..' கங்கனா ரணாவத்
வெளிபடையாக தனது கருத்துக்களை தெரிவித்ததற்காக வருடத்திற்கு 30 முதல் 40 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்திப்பதாக தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.
சமூக வலைதளங்களில் தனது கருத்துக்களை பகிர்ந்த காரணத்திற்காக வருடத்திற்கு 30 முதல் 40 கோடி வரை நஷ்டமடைவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கங்கனா ரனாவத். மேலும் தான் மிகவும் மதிக்கும் எலான் மஸ்கின் பதிவு ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார் கங்கனா.
கங்கனா ரனாவத்:
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் கருத்துக்கள் சர்ச்சையாவது ஒன்றும் புதிய விஷயமில்லை. தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிடும் கருத்துக்களுக்காக ரசிகர்களால் பயங்கரமாக விமர்சிக்கப்பட்டு இருக்கிறார். தற்போது தான் தெரிவித்த கருத்திற்காக வருடத்திற்கு 30 முதல் 40 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அவர்.
சில காலம் முன்பு கங்கனா தேச விரோதிகள், மற்றும் அரசியல்வாதிகளை விமர்சித்திருந்தார். இந்த பதிவை அவர் பதிவிட்ட அடுத்த நாளிற்குள் அவர் நடிக்க இருந்த விளம்பரங்கள் அனைத்திலும் இருந்தும் அவர் நீக்கப்பட்டதாகவும் விளம்பரங்களின் மூலம் தனக்கு சுமார் 30 இலிருந்து 40 கோடி வரை வருமாணம் வந்துகொண்டிருந்ததாகவும் தற்போது அந்த வருவாய் தனக்கு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்கின் தைரியம்:
கங்கனா ரனாவத் தனிபட்ட முறையில் எலான் மஸ்கை தனது இன்ஸ்பிரேஷனாக கருதுபவர். எலான் மஸ்க் தொடர்பான எந்த செய்தி இருந்தாலும் அங்கு கங்கனாவை பார்த்துவிடலாம். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியபோது அதை மகிழ்ச்சிகரமாக கொண்டாடினார் கங்கனா. இந்த பதிவில் கங்கனா எலான் மஸ்கின் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
அண்மையில் எலான் மஸ்க் நிகழ்ச்சி ஒன்றில் “ நான் என் மனதிற்கு உண்மை என்று பட்டதை தைரியமாக பேசுவேன் . அப்படி பேசியதற்காக நான் பணத்தை இழப்பேன் என்றால் அதைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை” எனக் கூறியிருக்கிறார்.அவரது இந்தக் கருத்தை பகிர்ந்த கங்கனா தன் மனதில் தோன்றியதை பேசுவதற்கான எலான் மஸ்கின் தைரியம்தான் தன்னை ஊக்குவிப்பதாக கூறியுள்ளார் கங்கனா
உரிமை இல்லை:
மேலும் “ என்னைப் பற்றை யார் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி எனக்கு கவலை இல்லை அதிலும் குறிப்பாக இந்தியாவின்மேல் மற்றும் இந்துக் கலாச்சாரம் மேல் வெறுப்பை வைத்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்னை தங்களது விளம்பரங்களில் இருந்து நீக்குவது குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை’. மேலும் ”என் மனதிற்கு பட்டதை பேசுவதற்கான முழு சுதந்திரம் எனக்கு இருக்கிறது அதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.” என கங்கனா தெரிவித்துள்ளார். கங்கனா தற்போது சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். எமெர்ஜென்சி காலம் தொடர்பான ஒரு படத்தை கங்கனா இயக்கி வருகிறார். இது அவரது இயக்குனராக முதல் படம்.